தமிழ் திரைப்படத்துறையில் “ஓ மை கடவுளே” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஷ்வத் மாரிமுத்து. இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், அவரின் இயக்கத்திற்கும் பாராட்டுகளை பெற்றுக் கொடுத்தது. இதன் மூலம், அஷ்வத்தின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பும் கணிசமாக அதிகரித்தது.
இந்நிலையில், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கிய “டிராகன்” திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வசூலில் பெரும் வெற்றி கண்டது. இதன் வெற்றியின் பின்னர், அஷ்வத் தனது அடுத்த படமாக நடிகர் சிலம்பரசன் நடிக்கும் 51-வது திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. சிறுவயது முதல் சிலம்பரசனின் ரசிகராக இருந்த அஷ்வத், தனது மூன்றாவது திரைப்படத்தில் அவரை இயக்கவிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் பேசிய அஷ்வத் மாரிமுத்து, “நான் நடிகர் சிலம்பரசனின் ரசிகன் தான். ஆனால், அதேசமயம் நடிகர் தனுஷையும் மிகவும் பிடிக்கும். மேலும், அவரிடம் ஒரு கதையை கூறியிருக்கிறேன். அந்தக் கதை காதல், ஆக்ஷன், திரில்லர் என மூன்றும் கலந்து அமைந்த ஒரு வித்தியாசமான கதையாக இருக்கும்,” என தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இவர்களது கூட்டணியும் அமைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.