‘நேரம்’, ‘சென்னை டூ சிங்கப்பூர்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஓஹோ எந்தன் பேபி’ போன்ற திரைப்படங்களில் நடித்த அஞ்சு குரியன், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். தற்போது அஞ்சு குரியன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அதர்ஸ்’ என்ற தமிழ் திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது.

இதற்கிடையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஞ்சு குரியனிடம், தமிழில் தொடர்ந்து நடிக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன? என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர் பதிலளித்தபோது, தமிழ் சினிமாவில் நடிக்க யாருக்குத்தான் பிடிக்காது? எனக்கும் அதில் மிகுந்த ஆர்வம் உண்டு. எனக்கு பொருத்தமான கதை கிடைக்க காத்திருந்தேன். இப்போது அது நடந்துள்ளது. இனி தமிழில் தொடர்ச்சியாக நடிக்க திட்டமிட்டுள்ளேன். என்மீது ரசிகர்கள் காட்டும் அன்புக்கும் ஆதரவுக்கும் நான் உண்மையிலேயே நன்றிக்கடன் பட்டுள்ளேன் எனத் தெரிவித்தார்.


