’16 வயதினிலே’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை ஒழுங்காக கவனித்துக் கொள்ளவில்லை என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்திருக்கிறார். கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போது அறிமுகமாகி விட்டார். அவருக்கு போராட்டங்கள் சினிமாவில் கொஞ்சம் குறைவுதான். ஆனால் ரஜினிக்கு அப்படி இல்லை. எந்த பின்னணியும் இல்லாமல் சினிமாவில் நுழைந்தவர். ஹீரோவாக முக லட்சணம் இல்லை என விமர்சனங்களும் பல.
அவமானங்களையும், போராட்டத்தையும் சந்தித்த ரஜினி தனது திறமையாலும், ஸ்டைலிலும், விடாமுயற்சியாலும் பெரும் வெற்றி கண்டு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.
ரஜினி சினிமா வாழ்க்கையில் 16 வயதினிலே படம் ரொம்ப முக்கியமானது. அவர் நடித்த பரட்டை கதாபாத்திரம் அவரை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.
இந்த படம் குறித்து பாரதிராஜா பேட்டி ஒன்றில் அந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசியிருக்கிறார்.“16 வயதினிலே படத்தில் கமல் ஹாசனுக்கு சம்பளம் 35,000 ரூபாய். ரஜினிக்கோ 5000 ரூபாய்தான் சம்பளம். ஏனெனில் அப்போது அவர் வளர்ந்து வரும் நடிகர். கமலுக்கும், ஸ்ரீதேவிக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் பலமாக கவனிப்பு இருக்கும். சாப்பாடு முதல் தங்கும் இடம் வரை அனைத்தையும் அவர்களுக்கு செய்து கொடுத்தேன். ஆனால் ரஜினியை நான் ஒழுங்காக கவனித்துக் கொள்ளவில்லை.
எங்கே தங்கினார் எப்படி படப்பிடிப்புக்கு வந்தார் அதைப்பற்றி அப்போது நான் கண்டுகொள்ளவில்லை. இருந்தாலும் அவர் முழு அர்ப்பணிப்புடன் 16 வயதினிலே படத்தில் நடித்து கொடுத்தார். நான் அவரை சரியாக கவனிக்காததை எல்லாம் ரஜினி கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்தினார். அதனால்தான் அவர் இவ்வளவு பெரிய நிலையை அடைந்திருக்கிறார்” என்று உருக்கமாக கூறியிருந்தார் பாரதிராஜா.