தெலுங்கு திரையுலகில் கடந்த சில ஆண்டுகளில் முன்னணி இளம் நடிகராக திகழ்ந்து வருபவர் விஜய் தேவரகொண்டா. தனது பிரபலத்தை பயன்படுத்தி ‘ரவுடி’ என்ற பெயரில் துணி தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அவர் சினிமாவில் அறிமுகமான காலத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்த படம் எவடே சுப்பிரமணியம். அதன் பின்னர் வெளியான அர்ஜுன் ரெட்டி படம் தான் அவரை பிரபல ஹீரோவாக உயர்த்தியது.

சமீபத்தில் ஒரு பேட்டியில், எவடே சுப்பிரமணியம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு சென்றபோது, புதிய உடைகள் வாங்கும் அளவிற்கு தன்னிடம் பணமில்லாததால், படப்பிடிப்பில் பயன்படுத்திய உடைகளையே அணிந்து கொண்டே அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன் என்று பகிர்ந்துள்ளார் விஜய் தேவரகொண்டா.
மேலும், “சினிமாவில் புதிதாக அறிமுகமாகும் நடிகர்களுக்கு ஏற்படும் போராட்டங்களை நானும் சந்தித்துள்ளதால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. அதனால் தான் சமீபத்தில் வெளியான லிட்டில் ஹார்ட்ஸ் படக்குழுவினருக்கு, எனது ‘ரவுடி’ நிறுவனத்தில் இருந்து உடைகளை பரிசாக வழங்கினேன்” என்று தெரிவித்துள்ளார்.