சரஸ்வதி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக உள்ளார் நடிகை வரலட்சுமி. இப்படத்தை இயக்குவதோடு படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் பிரகாஷ் ராஜ், ப்ரியாமணி, நவீன் சந்திரா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.

இசையமைப்பாளர் தமன் இசையமைக்கும் இப்படத்தை, தன் சகோதரி பூஜாவுடன் இணைந்து வரலட்சுமியே தயாரிக்கிறார்.இத்திரைப்படம் குறித்து ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகையிடம் பேசிய வரலட்சுமி கூறியதாவது,
“நான் கதையில் பல மாற்றங்கள் செய்தேன். ஒரு குறிப்பிட்ட வரி எனக்கு பிடித்திருந்தது. அதைத் தேர்ந்தெடுத்து விரிவாக்கினேன். சீனியர் நடிகர்களிடம் கதை சொன்னபோது, அவர்கள் ஆர்வமாகக் கேட்டது ஒரு நல்ல உணர்வு. அதுவே நான் சரியான பாதையில் இருப்பதைக் காட்டுகிறது. அவர்கள் இந்தப் பயணத்தில் இணைந்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. சில நடிகர்களை பின்னர் அறிவிப்போம். நல்ல நடிகர்கள் சிறப்பாக நடிக்கும் போது, ஒரு இயக்குநராக எனது வேலை 80% முடிந்துவிடுகிறது என்று நினைக்கிறேன்.” என்றார்.