தொடக்கத்தில் தொடர்ச்சியாகப் பல திரைப்படங்களில் நடித்த பிந்து மாதவி, பின்னர் வருடத்திற்கு ஒரு படம் அல்லது இரண்டு படங்களில் மட்டுமே நடித்துவரத் தொடங்கினார். அதன் பிறகு நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு, ‘கழுகு 2’ திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டில் அவர் நடித்த ‘மாயன்’ திரைப்படம் வெளியானது. தற்போது, ‘யாருக்கும் அஞ்சேல்’, ‘பகைவனுக்கு அருள்வாய்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஜி.வி. பிரகாஷுடன் இணைந்து நடித்திருக்கும் ‘பிளாக்மெயில்’ திரைப்படம் அடுத்து வெளியாக உள்ளது. இதில் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்திருந்தாலும், பிந்து மாதவி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து பிந்து மாதவி கூறியதாவது: “பெண்கள் தங்களுக்குரிய தனித்துவமான இடத்தைப் பெறும் முயற்சியில் தொடர்ச்சியாக சவால்களை எதிர்கொள்கிறார்கள். ஆனால் இயக்குநர் மு. மாறன் ‘பிளாக்மெயில்’ படத்தின் கதையை எனக்கு விவரித்த நேரத்தில், அது என்னுடன் உடனடியாக ஒரு தொடர்பை ஏற்படுத்தியது. அது எனக்காகவே காத்திருந்த ஒரு கதாபாத்திரம் போலவே எனக்குப் பட்டது.”
“உணர்ச்சி மற்றும் ஆழம் கலந்து உருவாக்கப்பட்ட என் கதாபாத்திரம் எனக்கு ஒரு பெரிய பொறுப்பையும் தந்தது. முக்கியமான பல கதாபாத்திரங்களுடன் இணைந்து எனது காட்சிகள் உருவாகியுள்ளன. ஜி.வி. பிரகாஷ்குமார் போன்ற திறமையான மற்றும் அழுத்தமான நடிப்பைக் கொண்ட நடிகருடன் பணியாற்றிய அனுபவம் மிகவும் சிறப்பானதாக இருந்தது. தேஜு அஸ்வினி, ஸ்ரீகாந்த் மற்றும் மற்ற அனைத்து நடிகர்களும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.