ராம் சரண் கதாநாயகனாக நடித்த ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தமன் இசையமைத்த இந்தப் படம், சில மாதங்களுக்கு முன் வெளியானது. எதிர்பார்ப்பு இருந்தபோதிலும், மக்களிடையே பெரிதளவில் வரவேற்பு இல்லாததால், இத்திரைப்படம் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற நித்தின் நடிப்பில் உருவாகியுள்ள ‘தம்முடு’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தில் ராஜு கலந்துகொண்டார். இந்தப் படத்தையும் அவரே தயாரித்துள்ளார். நிகழ்ச்சியில் பேசிய தில் ராஜு, பல நேர்காணல்களில் தான் ராம் சரணுக்கு ஒரு மிகச் சிறந்த வெற்றி படம் கொடுக்க முடியாமல் போனது குறித்து வருத்தம் தெரிவித்து வந்ததாக கூறினார்.
அதேவேளை, நேற்று நடந்த விழாவில் யாரும் எதிர்பாராத விதமாக தில் ராஜு கூறியதாவது, “கேம் சேஞ்சர் படம் நாங்கள் நினைத்தபடி ஓடவில்லை. ராம் சரணை வைத்து ஒரு சூப்பர் ஹிட் படம் கொடுக்க இயலவில்லை என்பதில் வருத்தம் உள்ளது. எனவே அடுத்ததாக அவரை வைத்து ஒரு மாபெரும் வெற்றிப் படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளேன். தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்,” என்றார். இந்த தகவல், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.