Touring Talkies
100% Cinema

Saturday, August 9, 2025

Touring Talkies

‘வானரன்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘வானரன் – படத்தின் கதை என்னவென்றால் ஆஞ்சநேயர் வேடம் அணிந்து வீதி வீதியாகச் சென்று காணிக்கை பெற்று தனது வாழ்க்கையை நடித்தி வரும் பிஜேஷ் (நடிகர் நாகேஷின் பேரன்) என்பவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நிகழும் ஒரு அழகான காதல் கதையுடன் கூடிய மனித நேயப்படமே “வானரன்”. பிஜேஷ் தனது மனைவியை இழந்த பிறகு, தனியாக வளர்த்துவரும் தனது மகளிடம் அளவில்லாத பாசம் காட்டுகிறார். வறுமையில் வாழ்ந்தாலும், மகளின் நலனுக்காக அனைத்தையும் செய்யத் துணிந்தார். ஆனால் அவரை சோதனைகள் தொடர்ந்து துரத்துகின்றன.

மகளுக்கு மூளையில் கட்டி உருவாகி அவசரமாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகுகிறது. அந்த அறுவைச் சிகிச்சைக்கான நான்கு லட்சம் ரூபாய் இல்லாத நிலையில் தவிக்கும் பிஜேஷுக்கு, நல்ல மனிதரான ஜீவா பண உதவியை அளிக்கிறார். ஆனால் அந்த பணம் திருடு போகும் நிகழ்வால் கதைக்கு திருப்பம் வருகிறது. பிஜேஷின் மகளுக்கு இறுதியில் அறுவைச் சிகிச்சை நடந்ததா? திருடப்பட்ட பணம் மீண்டும் கிடைத்ததா? அந்த பணத்தை எடுத்தது யார்? ஏன் எடுத்தது? என்ற கேள்விகளுக்கான பதில்கள் தான் “வானரன்” திரைப்படத்தில் உள்ளது. இந்த படத்தை இயக்கியவர் ஸ்ரீராம் பத்மநாபன்.

இந்த திரைப்படத்தின் முக்கியமான நரம்பாக அமைந்துள்ளது அப்பா-மகள் பாசம். இந்த பாசத்துடன் கடவுள் நம்பிக்கை, தர்மம், சோதனைகள், துன்பங்கள், விட்டுக்கொடுத்தல், மனிதநேயம் ஆகிய அனைத்தையும் எளிமையாக ஒன்றோடொன்று நெய்து, உணர்ச்சி பூர்வமான ஒரு படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஸ்ரீராம் பத்மநாபன்.

ஆஞ்சநேயர் வேடமிட்டு “ராமஜெயம்” எனக் கூறி வீடுவீடாகச் சென்று காணிக்கை பெறும் அனுமந்தராவ் என்ற கதாபாத்திரத்தை நம்பிக்கையுடன் வாழ்த்தியுள்ளார் பிஜேஷ் எனும் நாகேஷின் பேரன். அவரது உடல்மொழி, வசன விவரிப்பு, குரல் ஒலி, நடிப்பு அனைத்துமே கதைக்கு உயிரூட்டும் வகையில் அமைந்துள்ளது. “தான் ஏன் இந்த வேடம் அணிந்து காணிக்கை பெறும் தொழிலைத் தேர்ந்தெடுத்தேன்?” என்று அவர் பேசும் விதம், அவரது காதல் நினைவுகள், மகளுக்கான பாசம், மகளுக்கு விருப்பமான செருப்பை வாங்கித் தர முடியாத வேதனை, உடல் நலமின்றி தவிக்கும் மகளை பார்த்து மனம் உடையும் தருணங்கள், கடைசியில் திருடனைப் பார்த்து பேசும் வசனங்கள் போன்ற அனைத்தும் மிகுந்த அழுத்தத்துடன் அமைந்துள்ளன. இவரது நடிப்பை பாராட்டி, “இவர் நாகேஷ் பெயரை மீட்டுள்ளார்” என்கிற நிலை உருவாகுகிறது. பிஜேஷுக்கு ஒரு பெரிய சபாஷ்.

ஒரு காட்சியில் மட்டுமே தோன்றி, ரஜினி ஸ்டைலில் நடித்துச் செம்மையாகக் கலக்கியுள்ளார் ஜீவா. நண்பனுக்காக ஓடிவரும் டி. ராஜேந்தர் வேடமிடும் காட்சி, திருடனாக வருகிற ஆதேஷ் பாலா, பிஜேஷின் காதலியாக வரும் அக்ஷ்யா, டாக்டர் மற்றும் போலீஸ்காரர்களாக நடித்தவர்கள் — இவர்கள் அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரங்களை அழுத்தமாகவும் நம்பிக்கையுடன்வும் நடித்துள்ளனர். ஒரே ஒரு காட்சியில் தோன்றி எளிமையான நகைச்சுவையை தருகிற தீபா சங்கர் மற்றும் நாஞ்சில் விஜயனும் படத்தில் கலகலப்பூட்டியுள்ளனர். படத்தின் ஒளிப்பதிவை கவனித்த நிரன்சந்தன் மிக இயல்பாகவும் சத்தமில்லாமல் வசதியாகவும் காட்சிகளை பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் ஷாஜகான், சரியான பின்னணி இசையுடன் கதையின் உணர்வுகளை மேலும் உயர்த்தியுள்ளார்.

இந்த திரைப்படத்தை பார்ப்பவர்கள், இனி ஆஞ்சநேயர் வேடமிட்டு வீதிகளில் காணிக்கை கேட்கிறவர்களை பார்ப்பதில் பாசத்தையும் பக்தியையும் உணர்வார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரு தனி வாழ்க்கை, குடும்பம், போராட்டம் இருக்கும் என்பதை இந்த படம் நம் மனதில் பதிய வைக்கிறது.

- Advertisement -

Read more

Local News