நவக்கிரகங்களில் சாயா கிரகங்கள் என அழைக்கப்படும் ராகு, கேது யார்? ‘சுவர்பானு’ என்ற அசுரனின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள், அவன் அமிர்தத்தை அருந்தியது, திருமாலின் மோகிணி அவதாரத்தால் தண்டிக்கப்பட்டது, பின்னர் துர்க்கையின் அருளால் ராகு, கேதுவாக உருவான விதம், இந்த கிரகங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கங்கள், அதனால் உருவாகும் தோஷங்கள், அவற்றை நீக்க நாம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் – இவற்றை பக்தி உணர்வுடன் சொல்லும் திரைப்படம் ‘ராகு கேது’.

கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு, முழுநீள புராண-பக்தி திரைப்படமாக வந்துள்ளது ‘ராகு கேது’. பழம்பெரும் நடிகர் ஆர்.எஸ். மனோகரின் நாடகக்குழுவில் பல ஆண்டுகள் பயிற்சி பெற்று நடித்த பாலசுந்தரம், இந்தப் படத்தை இயக்கி, ‘சுவர்பானு’ என்ற அரக்கனாகவே நடித்துள்ளார். ஏராளமான புராண நாடகங்களுக்கும், திரைப்படங்களுக்கும் கதை, வசனம் எழுதிய கே.பி. அறிவானந்தம், இந்தப் படத்திற்கும் அதே பொறுப்பை ஏற்று, ஜோதிடராகவும் நடித்துள்ளார்.
ஒரு மன்னரைச் சார்ந்த துணைக் கதையுடன் படம் தொடங்கி, ராகு, கேது உருவான விதத்தை விளக்குகிறது. அதில் – சுவர்பானுவின் குணநலன்கள், அவன் காதலி, குடும்பம், தேவர்கள், அசுரர்கள் இணைந்து பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பெறும் நிகழ்வு, அதில் நடக்கும் சூழ்ச்சிகள், இறுதியில் சுவர்பானு திருட்டாக அமிர்தம் அருந்தி சாகாவரம் பெறுவது, பின்னர் திருமாலின் மோகிணி அவதாரம் அவனைத் தலை, உடல் எனப் பிரிப்பது, துர்க்கையின் அருளால் ராகு, கேதுவாக மாறுவது, அந்த கிரகங்களின் ஆதிக்கத்தால் மன்னரின் குழந்தைக்கு வரும் பிரச்சினைகள், அதற்கான பரிகாரங்கள் ஆகியவை, நாடக பாணியில் சொல்லப்படுகின்றன.
சுவர்பானுவாக, தெளிவான, நிதானமான உரையாடல்களுடன், பக்காவாக நடித்துள்ளார் இயக்குநர் பாலசுந்தரம். குறிப்பாக ராகு, கேதுவாக அவர் வரும் காட்சிகள் ஆச்சரியத்தைத் தருகின்றன. காதல் காட்சிகளை குறைத்திருக்கலாம்; அவை கதையுடன் ஒட்டவில்லை. ஜோதிடராக வரும் கே.பி. அறிவானந்தத்தின் நடிப்பும், வசனங்களும் சிறப்பாக உள்ளன. நாரதராக வரும் ரவிகுமார் நினைவில் நிற்கிறார். ஆனால், சில நடிகர்களின் நடிப்பு செயற்கையாக இருந்தது; சிலர் தங்களது பாத்திரங்களுக்கு பொருந்தவில்லை. ஒளிப்பதிவாளர் மோகன், காட்சிகளை நிறமிகுந்தவையாகப் படம்பிடிக்க முயற்சித்துள்ளார். ராகு, கேதுவை தனித்தனியாக காட்டிய உத்தி சிறப்பாக அமைந்துள்ளது.
ராகு, கேது கிரகங்கள், அவற்றின் குணங்கள், பாதிப்புகள் குறித்து பலருக்குத் தெரிந்திருந்தாலும், ‘சுவர்பானு’ எவ்வாறு ராகு, கேதுவாக மாறினார் என்பதைக் குறித்து தெரிந்திருப்போர் குறைவு. குறிப்பாக இளைஞர்கள், குழந்தைகளுக்கு இது அதிகம் அறிமுகமில்லை. அதனால், இந்த விஷயங்களை எளிமையாகக் காட்சிப்படுத்தி, நவக்கிரகங்களின் வலிமை, வழிபாட்டு முறைகள், ஸ்லோகங்கள், ராகு, கேது ஆதிக்கத்தால் உருவாகும் பிரச்சினைகள், தீர்வுகள், பரிகாரங்கள் ஆகியவற்றை அழகாகச் சொல்லி, ஒரு சிறந்த ஆன்மிகத் திரைப்படத்தை வழங்கியுள்ளார் இயக்குநர் பாலசுந்தரம்.
காளஹஸ்தி ஸ்தலத்தின் பெருமைகளையும், அங்கே செய்ய வேண்டிய பரிகாரங்களையும் விவரித்த விதம் ரசனையூட்டுகிறது. அந்த மன்னரைச் சார்ந்த துணைக் கதையைச் சுருக்கி, ஆன்மிக விஷயங்களுக்கான காட்சிகளை அதிகரித்திருக்கலாம். உடைகள், ஆபரணங்களில் கவனம் செலுத்தப்பட்டிருந்தாலும், நடிகர்கள், பின்னணி, கிராபிக்ஸ் ஆகியவை பட்ஜெட் காரணமாக சுமாராக இருந்தன. குறிப்பாக தேவர் கதாபாத்திரத் தேர்வு மிகவும் சாதாரணமாக இருந்தது; சில நெருக்கக் காட்சிகள் சற்று அசௌகரியம் அளித்தன. இந்த குறைகள், புராணப்படங்களுக்கு உரிய ஈர்ப்பை குறைத்தன. பாடல்கள் ஓரளவு நன்றாக இருந்தன. நாடக அனுபவம் கொண்டவர்களின் படமாக இருப்பதால், வசனங்களிலும், உச்சரிப்பிலும் நாடக பாணி அதிகம் இருந்தது. கதையை வேகமாக நகர்த்தி, சினிமா பாணியில் மாற்றியிருக்கலாம்.சில காட்சிகளில் வந்தாலும், துர்க்கையாக கஸ்தூரியின் நடிப்பு சிறப்பாக இருந்தது; அவரின் காட்சிகளும், சிவனாக சமுத்திரக்கனி நடித்த காட்சிகளும், படத்திற்கு பெரிய பலனாக அமைந்துள்ளன.