வனிதாவும், ராபர்ட்டும் பாங்காக்கில் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். “இப்போது குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்றால் பிறகு கடினமாகிவிடும், வயது ஆகியிருக்கிறது” என சிலர் கூறுவதால் வனிதாவும் அம்மாவாக வேண்டும் என ஆசைப்பட ஆரம்பிக்கிறார். ஆனால் ராபர்ட் குழந்தை வேண்டாம் எனத் திட்டமாக கூறுகிறார். அம்மாவாக வேண்டும் என வலியுறுத்தும் வனிதா, பல வகையான ரொமான்ஸ் முயற்சிகளை செய்கிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதை அடல்ட் உள்ளடக்கத்துடன் விவரிக்கும் படம் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’. இப்படத்தை இயக்கியிருக்கிறவரும் வனிதா தானே. மேலும், அவருடைய மகள் ஜோவிகா இப்படத்தின் தயாரிப்பாளராக செயல்பட்டுள்ளார்.

நாற்பது வயதுப் பெண்ணின் குழந்தை வேண்டும் ஆசை, கருவாகும் முயற்சியில் ஏற்படும் சிக்கல்கள், அதன் காரணமாக கணவன்–மனைவி இடையே உருவாகும் குழப்பங்கள், சுற்றியுள்ளோரின் ஆலோசனைகள், மற்றும் இறுதியில் குழந்தை பிறந்ததா என்பதற்கான பதில் என்கிற கருவில், படத்தின் உள்ளடக்கம் அமைந்துள்ளது. ஆனால் இதில் அடல்ட் கூறுகள் இடம் பெற்றதால், கதை வேறு கோணத்தில் செல்கிறது. பாங்காக்கில் படமாக்கப்பட்ட காட்சிகள் பார்வைக்கு அழகாக அமைந்துள்ளன என்பதும் இந்த படத்தின் சிறப்பாகும்.
அம்மாவாகும் ஆசையை வெளிப்படுத்தும் திட்டங்கள், கணவருடன் ஏற்படும் வாக்குவாதங்கள், மற்றும் காதல் காட்சிகளில் வனிதாவின் நடிப்பு நன்றாகவே உள்ளது. இருப்பினும் கதாநாயகியாக நடித்திருப்பதனால் உடல் எடையை குறைத்து, அதற்கேற்ப உடைகளில் நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமென்று தோன்றுகிறது. ராபர்ட் தனது கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு சிறப்பாக நடித்துள்ளார். அவருடைய நண்பராக நடித்த கணேஷும், வனிதாவுக்கு ஆலோசனை வழங்கும் ஆர்த்தியும் கவனிக்கத்தக்க வகையில் உள்ளனர். அம்மாவாக நடித்த ஷகிலா தெலுங்கு கலந்த தமிழில் நடித்து, தனது கதாபாத்திரத்தை நிறைவு செய்துள்ளார். அவருடன் இணைந்த சில ஆன்ட்டிகள் அதிகமாக செயல்படுகிறார்கள். மேலும், வனிதா, ஷகிலா, பாத்திமா பாபு, குமுதாஜ், சர்மிளா, வாசுகி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்துள்ள இப்படத்தில், கிரண் பாடிய “ராத்திரி சிவராத்திரி” ரீமிக்ஸ் பாடல் சரியான இடத்தில் வந்து, படமாக்கப்பட்ட விதமும் சிறப்பாகவே அமைந்துள்ளது. எனவே, மொத்தத்தில், காதல், வாக்குவாதம் போன்றக் கூறுகளோடு ஒரு முறை பார்வையிடத்தக்க திரைப்படமாக ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ அமைந்துள்ளது.