தனியார் நிறுவனத்தில் குறைந்த வருமானத்தில் சென்னையில் வாழ்ந்து, குடும்பச் செலவுகளை சமாளித்து வரும் முனிஷ்காந்த்–விஜயலட்சுமி தம்பதிகளுக்கு, பூர்வீக சொத்து வழியாக ஒரு கோடி மதிப்புள்ள செக் கிடைக்கிறது. “இதைக் கொண்டு இதைச் செய்வோம், அதை வாங்கலாம்” என பல திட்டங்களும் கனவுகளும் உருவாகும் சூழலில், பெயர் நிரப்பப்படாத அந்தச் செக் தவறுதலாக காணாமல் போகிறது. அந்தச் செக் யாரால் வழங்கப்பட்டது? அது எப்படித் தொலைந்தது? அதை மீண்டும் கண்டுபிடிக்க முடிந்ததா? என்பதே இத்திரைப்படத்தின் மையக் கதை. இப்படத்தை கிஷோர் ராமலிங்கம் இயக்கியுள்ளார்.

படத்தின் தலைப்போடு பொருந்தும்வகையில், ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் மனநிலை, அவர்களின் பொருளாதார நிலை, எதிர்பார்ப்புகள், ஒரு கோடி ரூபாய் திடீரென கிடைத்தால் ஏற்படும் உற்சாகம், அதை இழக்கும் தருணத்தில் அவர்கள் சந்திக்கும் போராட்டம் போன்ற பல அம்சங்களை உணர்வுபூர்வமாக மக்களின் பார்வையில் காட்டுகிறார் இந்த அறிமுக இயக்குனர். மரகத நாணயம் உள்ளிட்ட படங்களை தயாரித்த ஆக்சிஸ் பிலிம் பேக்டரி இப்படத்தை தயாரித்துள்ளது.
அன்பான மனைவி, இரண்டு குழந்தைகள், அவ்வப்போது பீர் குடிப்பது, வயிறு, கிராமத்து தன்மை, நண்பர்களுடன் பொழுதுபோக்கு, சொந்த ஊரில் குடியேற வேண்டும் என்பதுபோன்ற எண்ணங்களுடன், நடுத்தர வயதுடைய மிடில் கிளாஸ் மனிதனாக முனிஷ்காந்த் முழுமையாக வாழ்ந்து காட்டியுள்ளார். கதையின் நாயகன் என்றாலும், ஹீரோஎனும் உயர்வு இல்லாமல், கதையைத் தாங்கும் பாத்திரமாக இயல்பாக செயல்பட்டுள்ளார். அடிக்கடி கோபப்படுபவர் என்ற மனைவியிடமிருந்து திட்டுகளைச் சுமந்து, சொந்த ஊரில் விவசாயம் செய்ய ஆசைப்படும் இந்த நபருக்கு, தந்தையின் உயில் வழியாக கிடைத்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான செக்கை இழந்துவிடும் சூழல், அதன் பின்னர் அவர் சந்திக்கும் போராட்டங்களே படத்தின் முதுகெலும்பு. பெயர் எழுதப்படாத அந்தச் செக்கை எங்கு தொலைத்தார் என்பது குறித்து அவர் நண்பர்களுடன் அலைந்து தேடும் காட்சிகள் பார்ப்பவர்களுக்கும் பதட்டத்தை ஏற்படுத்துகிறது. இறுதியில் சில நிகழ்வுகள் மூலம் “இதுதான் வாழ்க்கை” என உணர்ந்து மாறும் அவனுடைய பயணம் சிறப்பாக அமைகிறது. அந்த சில நிமிடங்கள் படத்தை ஃபீல் குட் படமாக உயர்த்துகின்றன. இந்த கதையின் நாயகனாக முனிஷ்காந்த் முழுமையாக வெற்றி பெற்றுள்ளார் என்று சொல்லலாம்.
அன்புராணி என்ற எப்போதும் கோபமாகவும் பணம் சம்பாதிக்க வேண்டும் என தீவிரத்துடன் அணுகும் கதாபாத்திரத்தில் விஜயலட்சுமி அகத்தியன் சிறப்பாக நடித்துள்ளார். கணவருடன் நடக்கும் சண்டைகள், உணர்ச்சிவசப்பட்டு பேசும் உரைகள் பல நடுத்தர குடும்ப பெண்களை நினைவில் கொண்டு வருகின்றன. அவரது குரலும், உடையும், நடையும் அந்தக் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக அமைந்துள்ளது. இனிமேல் நடிப்பை குறைக்க வேண்டாம், தொடர்ந்தும் அதிகம் நடிக்க வேண்டும் என்பதற்கான பளிச்சிடும் நடிப்பு இது.
இவர்களைத் தொடர்ந்து, செக் தொடர்பாக வரும் செட் கதாபாத்திரம், அதைத் தேட உதவும் ராதா ரவி, டாக்டராக மாளவிகா அவிநாஷ், முனிஷ்காந்தின் நண்பர்களாக கோடாங்கி வடிவேலு, குரேஷி, குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் தங்களின் பாத்திரங்களை சிறப்பாக நிறைவேற்றி படத்திற்கு வலு சேர்த்துள்ளனர். ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் வரும் வேல ராமமூர்த்தியின் உரைகளும் செயல்பாடுகளும் வாழ்க்கையை உணர்த்தும் விதத்தில் அமைந்துள்ளன; குறிப்பாக யூடியூப் வழியாக தொடங்கும் காட்சிகள் நகைச்சுவையை ஏற்படுத்துகின்றன.
ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தொலைந்துவிட்ட செக்கைத் தேடும் மிடில் கிளாஸ் குடும்ப கதை என்றாலும், அதன் உள்ளே மனிதநேயம், உணர்ச்சிகள், ஏழை–பணக்காரர்களின் மனப்போக்குகள், நண்பர்கள், அந்நியர்களின் நல்ல மனம், பணத்தின் மதிப்பு, நடுத்தர வர்க்க வாழ்க்கை போன்ற பல அம்சங்களை ஒவ்வொரு காட்சியிலும் இயல்பாக நுட்பமாக சொல்லி, ஒரு நேர்மையான எண்ணத்தை உருவாக்குகிறார் இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம்.

