கேரளாவில் உணவகம் நடத்தி வரும் மோகன்லால், நாற்பது வயதைக் கடந்தும் திருமணம் ஆகாமல் இருக்கிறார். அவருக்கு சொந்தமாக இருப்பவர்கள் அக்காவும் அக்காவின் கணவரும் மட்டுமே. இந்நிலையில், இதய நோயால் பாதிக்கப்பட்ட மோகன்லாலுக்கு, புனேயில் விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரியின் இதயம் பொருத்தப்படுகிறது. சில நாட்கள் கழித்து அந்த அதிகாரியின் மகளான மாளவிகா மோகனன், தனது திருமண நிச்சயதார்த்தத்திற்கு மோகன்லாலைக் கேட்டு வருகிறார். தந்தையின் ஸ்தானத்தில் நீங்கள் நிற்க வேண்டும் என்பதே அவரது வேண்டுகோள்.

ஆரம்பத்தில் மறுத்தாலும், தனது உதவியாளர் சங்கீத் பிரதாப்புடன் மோகன்லால் சென்று விடுகிறார். ஆனால், மணமகனுடன் ஏற்பட்ட திடீர் முரண்பாட்டின் காரணமாக, மாளவிகா நிச்சயதார்த்தத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்கிறார். அப்போது ஏற்பட்ட குழப்பத்தில், சமாதானம் செய்ய முற்பட்ட மோகன்லாலின் முதுகில் கடுமையான அடிபட்டு, இரண்டு வாரங்களுக்கு மேல் அவர் பயணம் செய்ய முடியாமல் அங்கேயே தங்கி சிகிச்சை பெறுகிறார்.
இந்த சூழ்நிலையில், மாளவிகா அவர்மீது காட்டும் அன்பு மோகன்லாலின் மனதை கவர்கிறது. மற்றொரு பக்கம், கணவரின் அடக்குமுறை குணத்தையே பார்த்து வந்த மாளவிகாவின் தாயான சங்கீதா, கணவரின் இதயம் பொருத்தப்பட்ட மோகன்லாலின் மென்மையான இயல்பை கண்டு ஈர்க்கப்படுகிறார். இந்த குழப்பமான சூழலில் இறுதியில் மோகன்லால் எதைத் தீர்மானிக்கிறார் என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.
படத்தின் முழுவதும் எந்த அதிரடி காட்சிகளும் இல்லாமல், சுலபமான நடிப்பின் மூலம் இயல்பாக நடித்துள்ளார் மோகன்லால். மாளவிகாவுடன் நெருக்கம் அதிகரிக்கும் தருணங்களில் குழப்பத்துடனும், சங்கீதா தன்னை நோக்கி வரும்போது தவிப்புடனும் இருதலைக் காதலில் சிக்கிய இளைஞனின் மனநிலையை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், மோகன்லால் வழக்கமாக தனது படங்களுக்கு நூறு சதவீதத்துக்கும் மேல் உழைத்தாலும், இந்தப்படத்தில் அவரிடமிருந்து வெறும் இருபது சதவீதம் மட்டுமே வெளிக்கொணரப்பட்டிருக்கிறது என்பதே வருத்தமாகும்.
மாளவிகா மோகனன் மிகுந்த அழகுடன் காட்சியளிக்கிறார். தந்தையை ஆழமாக நேசிக்கும் அவர், தந்தையின் இதயம் பொருத்தப்பட்ட மோகன்லாலுக்கு காட்டும் மரியாதையும் அன்பும் மிகுந்த நேர்த்தியுடன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ‘பூவே உனக்காக’ புகழ் சங்கீதா, மாளவிகாவின் தாயாக பொருத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மோகன்லாலிடம் சங்கீதாவும், மாளவிகாவும் மாறி மாறி அன்பு காட்டி திணறடிக்கும் காட்சிகள் அக்மார்க் நகைச்சுவையை உருவாக்குகின்றன.
‘பிரேமலு’ நடிகர் சங்கீத் பிரதாப், தொடக்கம் முதல் கிளைமாக்ஸ் வரை மோகன்லாலுடன் இணைந்து பயணிக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மோகன்லாலுடன் சேர்ந்து அவர் கலகலப்பாக கலாட்டா செய்திருக்கிறார். மோகன்லாலின் அக்கா கணவராக சித்திக், அதேபோல் இறந்த ராணுவ அதிகாரியின் நண்பராக லாலு அலெக்ஸ், அடிக்கடி வந்து “என் நண்பனின் இதயம் உங்களைப் பற்றி ஏதாவது சொல்கிறதா?” எனக் கேட்கும் காட்சிகள் சிறிதளவு கவனம் ஈர்க்கின்றன.