Touring Talkies
100% Cinema

Friday, September 12, 2025

Touring Talkies

‘பிளாக்மெயில்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘பிளாக்மெயில்’ படத்தின் கதையின் மையம் குழந்தை கடத்தல். கோவையில் கூரியர் கம்பெனியில் டிரைவராக வேலை பார்க்கும் ஜி.வி. பிரகாஷ், வண்டியில் இருந்த போதை மருந்து பார்சலை ஒருவன் திருடுகிறார். அந்த பார்சல் காரணமாக ஜி.வி. பிரகாஷின் காதலி தேஜூ அஸ்வினியை, ஓனர் வேட்டை முத்துகுமார் கடத்தி வைத்து, “50 லட்சம் மதிப்புள்ள அந்த பார்சலை கொண்டு வந்தால் அவ்வளவுதான்” என மிரட்டுகிறார். அதே சமயம், தொழிலதிபர் ஸ்ரீகாந்தின் மகளை பணத்துக்காக கடத்த திட்டமிடுகிறார் வில்லன் லிங்கா. தனது காதலியை காப்பாற்ற வேண்டிய நிலை காரணமாக, அந்த வேலையைச் செய்ய நினைக்கிறார் ஜி.வி. பிரகாஷ். ஆனால், அந்த குழந்தையை இன்னொருவரும் கடத்துகிறார். சிறுமி இடம் மாறிக்கொண்டே செல்கிறாள். கடைசியில் குழந்தை மீட்கப்பட்டாளா? யார் கடத்தியது? அவர்களின் நோக்கம் என்ன? என்ற கேள்விகளோடு கதை விறுவிறுப்பான திரில்லராக நகர்கிறது.

யார் யாரை பிளாக்மெயில் செய்கிறார்கள், எதற்காக செய்கிறார்கள், வெற்றி பெறுவது யார் என்ற பல கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக, பல்வேறு கதாபாத்திரங்களின் பின்னணியில் சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் மு. மாறன். இவர் இரவுக்கு ஆயிரம், கண்ணை நம்பாதே போன்ற படங்களை இயக்கியவர். மருந்துக் கடையில் வேலை பார்க்கும் காதலனாக ஜி.வி. பிரகாஷ் ஹீரோயிசம், பில்ட்அப், ஆடல்–பாடல் எதுவுமின்றி இயல்பாகவே நடித்திருக்கிறார். காதலியை இழந்த தவிப்பு, குழந்தையை கடத்தும் முயற்சி, குழந்தையை தேடி அலையும் காட்சிகள், ஸ்ரீகாந்திடம் கெஞ்சும் தருணங்கள் எல்லாமே நன்றாக வெளிப்பட்டுள்ளன. குறிப்பாக, “பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை” என்று ஓனரிடம் பேசும் கிளைமாக்ஸ் டயலாக் அந்த சூழலுக்கு பொருத்தமாக அமைகிறது.

தேஜூ அஸ்வினி ஹீரோயினாக இருந்தாலும் சில காட்சிகளில் மட்டுமே தோன்றுகிறார். குழந்தையின் அம்மாவாக வரும் பிந்து மாதவி தான் படத்தில் அதிகம் ஸ்கோர் செய்கிறார். வில்லனால் மிரட்டப்படும் காட்சிகள், குழந்தையை இழந்து தவிக்கும் தருணங்கள், ஸ்ரீகாந்திடம் உண்மையை மறைக்கும் சீன்கள் – இவற்றில் அவர் வெளிப்படுத்திய எமோஷன்கள் சிறப்பாக வேலை செய்கின்றன.

ஜி.வி. பிரகாஷின் நண்பராக ரமேஷ் திலக், வில்லனாக லிங்கா, ஓனராக முத்துகுமார் ஆகியோரும் மனதில் நிற்கிறார்கள். ரெடின் கிங்ஸ்லி சில காட்சிகளில் காமெடியில் சிரிக்க வைக்கிறார். குழந்தையின் தந்தையாக ஸ்ரீகாந்தும் நீண்ட காலத்துக்கு பின் நல்ல குணசித்திர வேடத்தில் நடித்துள்ளார். கதை கோவையில் நடப்பதாக இருந்தாலும், அங்கு பேசப்படும் ஸ்லாங் படம் முழுவதும் காணப்படவில்லை. முக்கியமாக கோவை மால் தவிர்த்து வேறு முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு எடுக்கப்படாதது குறையாக இருந்தாலும், கதை ஓட்டமும், கோகுல் பினாயின் ஒளிப்பதிவும் அதை மறைக்கின்றன. சாம் சி.எஸ். பின்னணி இசை திரில்லர் காட்சிகளுக்கு பிளஸ்.

படத்தின் மிகப்பெரிய பலம் ட்விஸ்ட்கள் தான். “இவரா? அவரா?” என நினைக்கும் போதெல்லாம் அடுத்த ட்விஸ்ட் வந்துகொண்டே இருக்கும். கிளைமாக்ஸ் வரை தொடரும் அந்த ட்விஸ்ட்கள் சமீப காலத்தில் பார்த்த சிறந்த முயற்சி. அதே நேரத்தில், குடும்பத்துடன் குழந்தை மீண்டும் சேருமா என்பதில் நீள்கொண்ட கிளைமாக்ஸ் சற்று சலிப்பை தருகிறது. எடிட்டிங் இன்னும் கூர்மையாக இருந்திருக்கலாம். தேவையற்ற கவர்ச்சி பாடல் கதைக்கு சம்பந்தமில்லாமல் போனது குறை. திருநங்கைகள் குறித்த இயக்குனரின் பார்வை மற்றும் அவர்களை காட்சிப்படுத்திய விதம் சிறப்பாக அமைந்துள்ளது. மொத்தத்தில், 2 மணி நேரத்தில் முடிந்துவிடும் விறுவிறுப்பான திரில்லர் முயற்சியாக பிளாக்மெயில் திரையரங்கில் வந்திருக்கிறது.

- Advertisement -

Read more

Local News