தென்மாவட்டத்து ஒரு கிராமத்தில் பிறந்த, கபடியை உயிராய் நேசிக்கும் இளைஞன், ஜாதி பிரச்சினைகள், அவமானங்கள், வன்முறை, துரோகங்கள் ஆகிய அனைத்தையும் கடந்து, தன் கனவை அடைவதற்காக போராடி வெற்றி பெறுவது தான் பைசன் – காளமாடன் படத்தின் மையக் கதை. இயக்குநர் மாரி செல்வராஜ் தனது தனித்துவமான பாணியில் இந்த கதையை உருவாக்கி இருக்கிறார்.

படம் தொடங்குவது ஜப்பானில் நடைபெறும் ஆசிய கபடி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் தருணத்திலிருந்து. அந்த போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் துருவ் விக்ரம் என்ற வீரர் அந்த நிலைக்கு எப்படி வந்தார், அவர் சந்தித்த சவால்கள் என்ன என்பதையே கதை பின்னோக்கிப் போய் சொல்லுகிறது. பள்ளி நாட்களில் பசியால் நண்பர்களின் டிபன் பாக்ஸை திருடி சாப்பிடும் குழந்தையாக தொடங்கி, தண்டனையாக மைதானத்தில் வெறியுடன் ஓடும் சிறுவனாகவும், அதே ஓட்டம் பின்னர் அவரது வாழ்வின் சின்னமாகவும் மாறுகிறது.
கபடி வீரராக துருவின் உடல் மொழி, விளையாட்டு பாணி, நெல்லைச் சொல்முறை, உணர்ச்சிப் பூர்வமான பேச்சு, கோபம், தன்னம்பிக்கை என அனைத்தும் பக்காவாகப் பொருந்தியிருக்கின்றன. அவரது சினிமா வாழ்க்கையில் இது முக்கியமான படமாகவும், ஹீரோவாக மனதில் நிற்க வைக்கும் வகையிலும் உள்ளது.
அவரின் தந்தையாக வரும் பசுபதி அதிரடி தேர்வாகி இருக்கிறார். “கபடி விளையாட்டு என் வீட்டில் வேண்டாம்” என கோபத்தில் ஆரம்பித்து, மகனுக்காக போலீசிடம் கெஞ்சும் வரை தந்தை உணர்வை உண்மையுடன் வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் நடிப்பை பார்த்து பலர் தங்கள் தந்தையை நினைத்து கண்கலங்குவது உறுதி.
துருவின் அக்காவாக நடித்த ரஜிஷா விஜயனும், அவரை வயதை மீறி நேசிக்கும் அனுபமா பரமேஸ்வரனும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியுள்ளனர். ஆசிரியராக வரும் அருவி மதன், அண்ணாச்சியாக லால் (வெங்கடேச பண்ணையார்), பசுபதியின் சகோதரராக அமீர் (பாண்டியராஜா), அனுபமாவின் அண்ணன், கபடி அதிகாரிகள், தேர்வுக் குழு உறுப்பினர் அழகம்பெருமாள், சிறு தோற்றத்தில் வரும் ரேகா நாயர் உள்ளிட்டோர் தங்கள் பங்களிப்பால் கதையை வலுப்படுத்தியுள்ளனர்.
படத்தின் நடுப்பகுதியில் இரண்டு ஜாதி தலைவர்கள் மோதும் காட்சிகள் வருகின்றன. முதலில் படம் முழுவதும் ஜாதி அரசியல் பற்றியே பேசுமோ என தோன்றினாலும், பின்னர் அவர்களின் சில நடவடிக்கைகள், உரைகள் சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக மாறி, ஒரு இளைஞனின் வெற்றிக்காக ஓடும் காட்சிகளாக மாறுகின்றன. பொருளாதார சிக்கல்கள், சமூக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த ஒரு கிராமத்திலிருந்து, கனவுகளை சுமந்த ஒருவன் எப்படி நாட்டின் பெருமையாக மாறுகிறான் என்பதை அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரர் மனத்தி கணேசனின் வாழ்க்கையைத் தழுவி சொல்லும் இந்த படம், மாரி செல்வராஜின் இயக்கத்தில் உணர்ச்சியும் உற்சாகமும் கலந்த ஒரு சிறந்த விளையாட்டு நாடகமாக திகழ்கிறது.