மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் பல்வேறு விஷயங்களை மேடையில் உரையாற்றிய போது அவர் கூறியதாவது:”நான் கல்லூரி படிப்பை முடித்தபிறகு சென்னைக்கு வந்தபோது, அங்கு நான் பல கம்யூனிஸ்ட் தோழர்களை சந்தித்தேன். அப்போது எனக்கு அந்தச் சிந்தனை குறித்தும், சமூகத்துக்கான போராட்டக் கோட்பாடுகளையும் அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இன்று நம் இயக்குநர் வெற்றிமாறன் சாரைப் பார்ப்பதுதான் ஒரு சிவப்பு சிந்தனையின் நினைவினைக் கொண்டு வருகிறது.

‘தறியுடன்’ என்ற நாவலின் அடிப்படையில், அவரது உதவி இயக்குநர் ‘சங்கத்தலைவன்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கினார். அந்த படத்தை வெற்றிமாறன் சார் தயாரித்தார். அந்தப் படம் தறித்தொழிலாளர்களின் வாழ்க்கையும் பிரச்சனைகளையும் நேரடியாக சொல்லிக் கொடுத்தது. அதற்கு முன், ‘விசாரணை’ மற்றும் ‘வடசென்னை’ போன்ற படங்கள் மூலம் என்னை ஒரு புதிய நிலைக்கு இட்டுச் சென்றார்.ஒரு நாள் ‘காவல் கோட்டம்’ என்ற நாவலைப் படித்தபோது அதிலிருந்த தகவல்கள் என்னை ஆழமாக கவர்ந்துவிட்டன. அந்த எழுத்தாளரை நேரில் சந்தித்துப் பேசியதும், சில புதிய உண்மைகளை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது.
என் வாழ்கையில் என்னைச் சுற்றி நிறைய பேர் என் கைகளைப் பிடித்து, இந்தச் சிந்தனையோடு நடக்கச் செய்து கொண்டிருக்கிறார்கள். நம்முடைய திரையுலகத்திலே சிவப்பு சிந்தனையை பின்பற்றும் இயக்குநர்களைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று சொன்ன திருமூலரே நம் நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் என நினைக்கிறேன்.இன்றும் வர்க்க வித்தியாசங்களை நீக்கி, சமூகத்தில் சமத்துவத்தை ஏற்படுத்துவதுதான் கம்யூனிஸத்தின் முக்கிய தத்துவமாகும். கம்யூனிஸ்ட் என்றால் பொதுவுடமைவாதி; அதாவது, ‘எல்லாருக்கும் எல்லாமும்’ கிடைக்க வேண்டும் என்று நினைப்பவரே உண்மையான கம்யூனிஸ்ட்.
உலகத்தில் எங்காவது யாராவது சிவப்பு சட்டை அணிந்து வருகிறாரெனில், அவர் ஒரு எளிய மனிதர் என்று நினைத்து நாமும் அவரிடம் உரையாடலாம் என்று நம்பிக்கையை அந்த நிறம் உருவாக்குகிறது. சிறுவயதிலிருந்தே எனக்கு சிவப்பு என்றால் பெரும் ஈர்ப்பு. எனவே கடவுளே கம்யூனிஸ்ட் என நினைக்கிறேன். ஏனெனில், அவர் எவரையும் உயர்ந்தவனாகவும் தாழ்ந்தவனாகவும் பார்க்காமல், அனைவரையும் சமமாகவே பார்ப்பவர்.
சிவப்பு நிறம் ஒரு வகை பயத்தையும் பொறுப்பையும் தரும். ஒரு மேடையில் நானும் பேச வேண்டும் என்றால், எனக்கு சிவப்பு சட்டை அணியவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. வலது, இடது என்ற பிரிவுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. தீயில் நல்லதும் கெட்டதும் என பிரிக்க முடியாது. தீ என்றால் அது தீயே. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, நல்ல மாற்றத்தை கொண்டு வர வேண்டும்” என்று சமுத்திரக்கனி உரை நிகழ்த்தினார்.