சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன், மாணவர்களைச் சந்தித்து உரையாற்றினார். அப்போது அவர், “சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை — இந்த மூன்று அம்சங்களிலும் எந்தச் சூழ்நிலையிலும் சமரசம் செய்யக்கூடாது. அவற்றில் சலுகை செய்தால் நாம் தவறான பாதையில் இழுத்துச் செல்லப்படுவோம்” என்று வலியுறுத்தினார்.

மேலும் அவர், “மனிதர்கள் சமூக அரசியல் விலங்கு எனச் சொல்வார்கள். இதில் ‘அரசியல்’ என்றால் அது தேர்தல் அரசியல் மட்டுமல்ல; நாம் யார், எந்தச் சூழலில் வாழ்கிறோம், எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வோடு இருப்பதே உண்மையான அரசியல். நமக்கென்று தெளிவான இலக்கு இருக்க வேண்டும். எதை நோக்கிப் போகிறோம், யாரைத் தொடர்ந்து செல்கிறோம், அவர் சரியானவரா என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். குறைந்தபட்சம் எது சரி, எது தவறு என்பதை அறிந்து கொள்ள வேண்டும். சுற்றியுள்ள சூழலை கவனியுங்கள், படியுங்கள், வாசியுங்கள்” எனவும் அறிவுறுத்தினார்.
அதோடு, இன்றைய சமூகம் எப்படி இயங்குகிறது, அதை இயங்க வைப்பது என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். விழிப்புணர்வு இல்லாமல் வாழக்கூடாது. சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை போன்ற மதிப்புகளில் தளர்ச்சி காட்டாமல் உறுதியாக நிலைத்திருக்க வேண்டும் என்று வெற்றிமாறன் மாணவர்களிடம் பேசினார்.