இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வரலாற்று பேண்டஸி படமாக உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்திருக்கிறார், மேலும் பாலிவுட் நடிகர் பாபி தியோலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி பான் இந்தியா ரிலீசாக வெளியாக உள்ளது. இதற்காக படக்குழுவினர் மும்பை, ஹைதராபாத், சென்னை போன்ற இடங்களில் புரமோஷன் நிகழ்ச்சிகளை பிரமாண்டமாக நடத்தினர். அதன் ஒரு பகுதியாக, நேற்று கேரளாவின் கொச்சியில் உள்ள பிரபல மாலில் ரசிகர்களின் முன்னிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
கேரளாவில் இளம் தமிழ் நடிகர்களில் விஜய், அஜித் என்கிற நிலையை அடுத்தபடியாக சூர்யாவும் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ளார். கங்குவா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியை அறிவித்தவுடன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அந்த மாலின் உள்ளேயும் வெளியேயும் திரண்டனர். அவர்களின் ஆரவாரத்தை கண்டு மிகவும் நெகிழ்ந்த சூர்யா, “இந்த அன்பு எனக்கு எப்போதும் நினைவில் இருக்கும். உங்கள் அன்பு எனக்காக கடவுளின் வரமாக இருக்கிறது. அதே நேரத்தில் உங்களின் பாதுகாப்பும் முக்கியம். மேலே உள்ள கண்ணாடி தடுப்புகளின் அருகே நிற்கும்போது கவனமாக இருங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.
சூர்யா தனது ரசிகர்களின் அன்பை கடவுளின் வரமாக மதித்ததும், ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர். அதைக் கண்ட சூர்யா உணர்ச்சி வசப்பட்டு, மேடையில் முழங்கால் போட்டு கைகூப்பி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.