பாலிவுட் நடிகையும், ‘தி லிவ் லவ் லாப்’ (LLL) அறக்கட்டளையின் நிறுவனருமான தீபிகா படுகோன், இந்தியாவின் முதல் மனநல தூதராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். மனநலம் குறித்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் தீபிகா காட்டிய ஆர்வம் மற்றும் பங்களிப்பை முன்னிட்டு அவர் இந்த பொறுப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலக மனநல தினத்தையொட்டி, இந்தியாவில் மனநல ஆதரவு அமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, தீபிகா படுகோனை மனநல தூதராக நியமித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த நியமனம், இந்தியாவில் மனநலம் குறித்த விழிப்புணர்வை பரப்பவும், பொது சுகாதாரத்தில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தவும் உதவும்” என்றார்.
தனது புதிய பொறுப்பை குறித்து தீபிகா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “உலக மனநல தினத்தன்று, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முதல் மனநல தூதராக நியமிக்கப்பட்டதில் பெருமை அடைகிறேன். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பொது சுகாதாரத்தின் முக்கிய பகுதியாக மன ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்தி பல அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளாக ‘தி லிவ் லவ் லாப்’ அறக்கட்டளையின் மூலம் மேற்கொண்ட பணிகளில் பெற்ற அனுபவம், நம்மை ஒருமித்த சமூகமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை தந்துள்ளது. இந்தியாவின் மனநல அமைப்பை வலுப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.