தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு மீண்டு வந்து மீண்டும் வெப் தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகையாய் மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும், தொழில்முனைவோராகவும் தன்னை நிலைநிறுத்தி வருகிறார்.

சமீபத்தில் அகில இந்திய மேலாண்மை சங்க மாநாட்டில் கலந்துகொண்ட அவர், தனது வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். “ஒரு நடிகராக உங்கள் காத்திருப்பு காலம் மிகக் குறைவு. நட்சத்திர அந்தஸ்து, புகழ், அங்கீகாரம் போன்றவை ஒரு மயக்கத்தை அளிக்கலாம். ஆனால் அது நிரந்தரம் அல்ல. வெள்ளிக்கிழமை வெளியாகும் படங்களின் வெற்றித் தோல்விகளால் என் மகிழ்ச்சி சிதைந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக என் படங்கள் வெளியாகாமல் இருந்தாலும், இதுவரை இல்லாத அளவுக்கு மகிழ்ச்சியாக உள்ளேன்.
பல பிரச்சினைகள் இருப்பதாக நினைக்கும் சூழலில், உடல்நல பிரச்சினை வந்தவுடன் அது ஒன்றே மிகப்பெரிய பிரச்சினையாகத் தெரியும். அந்த அனுபவம் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தது. வாழ்க்கை ஒரு விளையாட்டு என்றால், வெற்றி தோல்வி முக்கியமல்ல; விளையாட்டைத் தொடர்வதே முக்கியம்” எனக் கூறினார்.