மணிகண்டன் நடிப்பில் வெளியான ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் தற்போது 50 நாட்களை கடந்தும் சில தியேட்டர்களில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதால், மணிகண்டன் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். அவர் கடந்த காலங்களில் நடித்த ‘குட் நைட்’, ‘லவ்வர்’, மற்றும் ‘குடும்பஸ்தன்’ ஆகிய மூன்று படங்களும் 50 நாட்கள் தியேட்டர்களில் ஓடியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தனது ‘எக்ஸ்’ தளத்தில் மணிகண்டன் வெளியிட்ட பதிவில் அவர் கூறியிருப்பதாவது: சிறிய அளவிலான வெற்றிகளுக்கும் பெரிய இதயங்கள் தேவைப்படுகிறது. மக்கள் எனக்குக் காட்டிய அன்பை சொல்ல வார்த்தைகள் தேடிச் சிரமப்படுகிறேன். ஒரு சிறிய படமானது 50 நாட்கள் தியேட்டர்களில் திரையிடப்படுவது என்பது ஒரு மிகப்பெரிய வெற்றியும், நினைவுகூரத்தக்க சாதனையும் ஆகும். இந்த வெற்றியை சாத்தியமாக்கிய அனைவருக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன். இது ஒருமுறை மட்டும் அல்ல, இருமுறை மட்டும் அல்ல — மூன்று முறைகள்! நாம் பெற்ற அன்பு எப்போதும் எங்களுடன் இருப்பதாக உணர்கிறேன்.
என்னை நம்பிய தயாரிப்பாளர்களுக்கும், எங்கள் கனவுகளை நம்பி துணை நின்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். என்னை நம்பி இந்த படங்களை இயக்கிய இயக்குனர்களுக்கும், இந்த படத்திற்கு உயிரூட்டிய அனைத்து திறமையான நடிகர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன். மேலும், ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ படக்குழுவினருக்கும் அவர் நன்றியை தெரிவித்திருக்கிறார்.