தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த பிரியாமணி ‘பருத்திவீரன்’ திரைப்படத்திற்காக தேசிய விருதை வென்றவர். அதன் பின்னர் மலைக்கோட்டை, நினைத்தாலே இனிக்கும், ராவணன் போன்ற படங்களில் நடித்தார். தற்போது தமிழ் மட்டுமன்றி மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். விஜய் நடித்துவரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

ராஜ் & டிகே இயக்கிய ‘த பேமிலி மேன்’ என்ற இந்தி வெப் தொடரில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, நீரஜ் மாதவ் உள்ளிட்டோர் நடித்தனர். அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிய இந்த தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பின்னர் அதன் இரண்டாவது சீசனும் வெளியாகி வெற்றி பெற்றது. அதில் சமந்தா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது மூன்றாவது சீசனின் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிலும் பிரியாமணி நடித்து வருகிறார்.
இந்த அனுபவத்தைப் பற்றி பிரியாமணி கூறியபோது, “இந்த தொடருக்காக மீண்டும் ஒன்றாக இணைந்தது மிகுந்த மகிழ்ச்சியான அனுபவம். படப்பிடிப்பு தொடங்கியதும் எங்களுக்கு இடைவெளி இருந்தது போலவே தெரியவில்லை. ‘லுக் டெஸ்ட்’ முடிந்ததும் படப்பிடிப்பில் கலந்துகொண்டோம். முதல் நாள் மிகவும் சிறப்பாக இருந்தது; மனோஜ் பாஜ்பாய், நமது குழந்தைகளாக நடித்தவர்கள் என அனைவரும் ஒன்றாகச் சேர்ந்தோம். சில மாதங்களுக்கு முன் இரண்டாம் சீசனை முடித்ததைப்போல் ஒரு பாசமான உணர்வு ஏற்பட்டது. ஒவ்வொரு டேக்-க்கும் முன் நாங்கள் முழுமையாக ஒத்திகை பார்த்து நடிப்போம். இந்த தொடர், கதாநாயகனின் வாழ்க்கை மட்டுமின்றி அவரது குடும்பத்தையும் மையப்படுத்தி பேசுகிறதுஇதுவே இதன் வெற்றிக்கான முக்கிய காரணம். முதல் இரண்டு சீசன்களைப் போலவே மூன்றாவதும் ரசிகர்களை கவரும். இதை சினிமாவாக எடுத்திருந்தாலும் அது நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்” என்று கூறினார்.

