நடிகர் விஜய் ராணுவ வீரராக நடித்தும், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்திலும் 2012ஆம் ஆண்டு வெளியான படம் தான் ‛துப்பாக்கி’. மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுமா என்று விஜய் ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து வந்தனர். ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இதற்கிடையில் நடிகர் விஜய், ‘ஜனநாயகன்’ படத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு முழுநேர அரசியலுக்கு செல்லுவதாக அறிவித்துவிட்டார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயனை வைத்து ‘மதராஸி’ படத்தை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸிடம், நீங்கள் இயக்கிய படங்களில் எந்த படத்தை இரண்டாம் பாகம் எடுக்க விரும்புகிறீர்கள்? எனக் கேட்டபோது, அவர் துப்பாக்கி படத்தையே இரண்டாம் பாகம் எடுக்க விரும்புவேன் என கூறியுள்ளார். மேலும், நான் எடுத்த படங்களில் இரண்டாம் பாகம் எடுக்க ஏற்ற படம் துப்பாக்கிதான். அந்தப் படத்தில், விடுமுறை முடிந்து விஜய் மீண்டும் பணிக்குச் செல்வார். அதை மனதில் வைத்து இரண்டாம் பாகத்திற்கான யோசனையுடன் அந்த காட்சியை வைத்தேன். அவர் திரும்பி ஊருக்குத் லீவுக்கு வந்தபோது நிகழும் சம்பவங்களை மையமாகக் கொண்டு இரண்டாம் பாகம் கதையை உருவாக்கலாம் என்பதற்காகவே அந்த கிளைமாக்ஸை அமைத்தேன் என்றார்.
மேலும், படத்தில் சத்யன் நடித்த கதாபாத்திரம் ‘ஒவ்வொரு முறை லீவுக்காக ஊருக்கு வரும்போதும் ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கி விடுவார்’ என்று வசனம் பேசுவார். இதையெல்லாம் இரண்டாம் பாகத்திற்கான கதை யோசனையை மனதில் வைத்து வைத்திருந்தேன். எனவே ‘துப்பாக்கி 2’ எடுக்கப்பட்டால் அது சிறப்பாக அமையும்” என்றார் ஏ.ஆர். முருகதாஸ்.