Friday, April 12, 2024

இளையராஜாவுடன் முதல் சந்திப்பிலேயே மோதல் – பிறைசூடனின் அனுபவம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“இசைஞானி இளையராஜாதான் தனக்கு தமிழ்த் திரையுலகத்தில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர்..” என்கிறார் கவிஞரும், பாடலாசிரியருமான பிறைசூடன்.

ஆனால், அதே இளையராஜாவுடனான முதல் சந்திப்பிலேயே அவருடன் மோதல் பிறந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கவிஞர் பிறைசூடன் பேசும்போது, “எனக்கு செளந்தர் என்ற ஒரு நண்பர் இருந்தார். இசைக் கலைஞர். அவர் தினமும் இளையராஜாவுடன் வேலை செய்வார். அவரிடத்தில் நான் பேசும்போது சில தத்துவங்களையும், வாழ்வியல் விஷயங்களையும் சொல்லுவேன். அவர் அதை இளையராஜாவிடம் கூறியிருக்கிறார்.

இளையராஜா என்னை அழைத்து வரும்படி சொன்னார். ஆனால் நான் போக மறுத்துவிட்டேன். “எனக்குப் பாட்டெழுத வாய்ப்புக் கொடுத்தால் மட்டும்தான் வருவேன்…” என்று இளையராஜாவிடம் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டேன்.

அப்போது ஒரு நாள் ஒரு டியூனை செளந்தரிடம் கொடுத்துவிட்டிருந்தார் இளையராஜா. இதற்கு ஏற்றவாறு பாடல்களை எழுதி வருமாறு சொல்லியிருந்தார். நானும் 10 சரணம், 10 பல்லவிகளோடு இளையராஜாவை பார்க்க சென்றேன்.

போகும்போதே என்னிடம் பலரும் சொன்னது.. “இளையராஜாவிடம் பார்த்து பக்குவமாக பேசுங்கள்.. மரியாதையுடன், பணிவாக நடந்து கொள்ளுங்கள்…” என்பதுதான். நானும் இதைக் கேட்டுவிட்டுத்தான் அங்கே போனேன்.

நான் போயிருந்தது ‘கண்ணுக்கொரு வண்ணக் கிளி’ என்ற படத்திற்கு பாட்டெழுத. இந்தப் படத்தை ‘ஒரு தலை ராகம்’ ரவீந்தர் தயாரித்திருந்தார். இந்தப் படத்திற்குத்தான் முதன்முதலில் இளையராஜாவின் இசையில் ‘துளித் துளிப் பனியாய்’ என்ற பாடலை எழுதியிருந்தேன்.

இளையராஜா வந்தவுடன் அவரிடம் “நான்தான் கவிஞர் பிறைசூடன்..” என்றேன். உடனேயே இளையராஜா “கவிஞரா இல்லையான்னு நீங்க சொல்லணுமா.. நான் சொல்லணுமா..?” என்றார். இதுவே எனக்குப் பிடிக்கலை. உடனேயே நானும் “நீங்க அங்கீகரிக்கணும்ன்றதுக்காக சொல்லலை. நானேதான் எனக்கு முகவர். அதனால நான்தான சொல்லணும்..” என்றேன்.

இதைக் கேட்டவுடன் இளையராஜா மீண்டும் உள்ளே சென்றுவிட்டார். அப்போது அங்கேயிருந்த இயக்குநர் கோகுலகிருஷ்ணா என்னிடம், “அவ்வளவுதான்.. நீ விளங்க மாட்ட..” என்றார்.

ஒரு மணி நேரம் கழித்து இளையராஜா என்னைக் கூப்பிட்டார். நான் கொண்டு போயிருந்த சரணம், பல்லவிகளைக் கொடுத்தேன். அதில் ‘துளித் துளி பனியாய்’ என்ற பாடலை எடுத்துக் கொண்டார். அதை மனோவும், சுசீலாவும் பாடினார்கள்.

நான் நிறைய எழுதியிருப்பதைப் பார்த்துவிட்டு அடுத்த நாளே எனக்கு இன்னொரு பாடலைக் கொடுத்தார். அது ‘இங்கே பொன் வீணை’ என்று துவங்கும் பாடல். இந்தப் பாடலைப் பாடியது லதா மங்கேஷ்கர்.

ஆனால் துரதிருஷ்டத்தை வாழ்க்கை முழுக்க நான் சந்தித்து வந்ததால் அத்திரைப்படம் இன்றுவரையிலும் வெளியாகவே இல்லை.. ஆனால், இந்த ஒரு படத்தின் மூலமாக இளையராஜாவிடம் துவங்கிய எனது பயணம் பல வருடங்கள் நீடித்தது…” என்கிறார் கவிஞர் பிறைசூடன்.

- Advertisement -

Read more

Local News