அமெரிக்கா என்றாலே நம்மை முதலில் நினைவிற்கு வருவது ஹாலிவுட் படங்கள், நவீன சாலைகள், வானுயர்ந்த கட்டிடங்கள், அங்குள்ள மக்களின் சொகுசான வாழ்க்கை ஆகியவையே. ஆனால், அமெரிக்காவில் பிறநாட்டு குழந்தைகள் கொத்தடிமை தொழிலாளர்களாக நடத்தப்படுகிறார்கள் என்ற செய்தி, பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. இந்த உண்மையை அடிப்படையாக கொண்டு, இந்தியரான விவேக் ராமசாமி தயாரித்துள்ள திரைப்படம் City of Dreams. இப்படத்தை மோஹித் ராமச்சந்தானி இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தில் ஆரி லோப்ஸ், ரெனாட்டா வேகா, ஆல்பர்ரோ காஸ்ட்ரோ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லிசா கர்னாட் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, அலஜெண்ட்ரோ காஸ்ட்ரோ ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்காவில் வெளியான இப்படம், தற்போது இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் இந்தியாவில் வெளியாக உள்ளது.
ஆஸ்கர் விருது போட்டியில் இடம்பெற்றுள்ள இந்த திரைப்படத்தின் கதைக்களம் – மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு கடத்தி கொண்டு வரப்படும் சிறுவன் ஜீசஸ், அங்கு கொத்தடிமை தொழிலாளராக பயன்படுத்தப்படுகிறான். அதன் பின் அவன் எப்படி அந்த நிலையிலிருந்து தப்பிக்கிறான் என்பதுதான் கதையின் மையம்.
இதுகுறித்து தயாரிப்பாளர்களில் ஒருவரான ரூபர் பார்கர் கூறியதாவது:இந்தக் கதையை அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கியிருக்கிறோம். வெளிநாடுகளில் இந்தியாவைப் பற்றிப் பேசும்போது, அதை வறுமையின் சின்னமாகவும், குழந்தைகள் பசியால் தவிப்பதாகவும், குடிசைப் பகுதிகளில் பிச்சைக்காரர்கள் வாழும் நாடாகவும் சித்தரித்துக் காட்டுகிறார்கள். ஆனால், அதே போல் அமெரிக்காவிலும் மறைக்கப்பட்ட உண்மைகள் இருக்கின்றன என்பதை ‘City of Dreams’ உலகத்திற்கு வெளிச்சம் போடுகிறது.பல போராட்டங்களுக்குப் பிறகு, இப்படம் அமெரிக்காவில் வெளியானபோது பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. “உலகின் சொர்க பூமி” எனப் புகழப்படும் அமெரிக்காவில் கூட இப்படிப்பட்ட கொடுமைகள் நடக்கின்றன என்பதை அறிந்து, அங்குள்ள பல பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது, இப்படம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வெளியிடப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.