Friday, April 12, 2024

திரைப்பட தணிக்கை வாரிய மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கலைப்பு – மத்திய அரசின் தடாலடி நடவடிக்கை..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரைப்பட தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை தடாலடியாக கலைத்துள்ளது மத்திய அரசு.

மத்திய அரசின் இந்தத் திடீர் முடிவுக்கு பாலிவுட் திரையுலகினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தியேட்டர்களில் வெளியாகும் படங்களுக்கு அந்தந்த மாநில சென்சார் போர்டு சான்றிதழ் வழங்குகிறது. படத்தில் சர்ச்சைக்குரிய விஷயம் இருந்தால் சான்றிதழ் வழங்க சென்சார் போர்டு மறுத்துவிடும். சான்றிதழ் பெற்றால்தான் படத்தை வெளியிட முடியும்.

அதனால் மாநில சென்சார் போர்டால் சான்றிதழ் மறுக்கப்பட்டவர்கள், மும்பையிலுள்ள சென்சார் போர்டு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் அந்த படத்தை காண்பித்து சான்றிதழ் பெறுவார்கள்.

1983-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த தீர்ப்பாயம் இனி செயல்படாது என்று மத்திய சட்ட அமைச்சகம் நேற்றைக்கு அறிவித்துள்ளது.

ஒரு படத்துக்கு சென்சார் போர்டு சான்றிதழ் வழங்க மறுத்தால், இனி சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவு திரைப்படங்களின் மூலமாக தற்போதைய மத்தியில் ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சியை விமர்சிக்கும் பல திரைப்படங்கள் வெளிவந்ததுதான் காரணம் என்று திரையுலகத்தில் பேசப்படுகிறது.

மாநில சென்சார் போர்டால் நிராகரிக்கப்படும் பல திரைப்படங்கள் இந்த நடுவர் தீர்ப்பாயத்தின் அனுமதியைப் பெற்று வெளியாகியுள்ளன.

2017-ம் ஆண்டு மத்திய சென்சார் போர்டு வெளியிட அனுமதிக்க முடியாது என்று மறுத்த லிப்ஸ்டிக் இன் புர்கா என்ற திரைப்படத்தை சில காட்சிகளை நீக்கிய பின்பு வெளியிட இந்த நடுவர் தீர்ப்பாயம்தான் அனுமதித்தது.

2016-ம் ஆண்டு இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் உட்டா பஞ்சாப் படத்தையும் இந்த நடுவர் தீர்ப்பாயத்தின் அனுமதி பெற்றுதான் வெளியிட்டார்கள்.

இது போன்று பல மொழித் திரைப்படங்களும் நடுவர் தீர்ப்பாயத்தின் அனுமதி பெற்று வெளியாகியுள்ளன. அதனால்தான் இந்தத் தீர்ப்பாயத்தை மத்திய அரசு ரத்து செய்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு பாலிவுட் இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், விஷால் பரத்வாஜ், ஹன்ஸல் மேத்தா, நடிகை ரிச்சா சட்டா உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விஷால் பரத்வாஜ் கூறும்போது, “திரைத்துறைக்கு இது சோகமான நாள். இது யாரையும் ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட தன்னிச்சையான முடிவு, நீதிமன்றங்களுக்கு சினிமா தொடர்பான வழக்குகளை விசாரிக்க நேரமிருக்கிறதா..? இப்படி ஒரு முடிவு எடுக்க இப்போது என்ன அவசியம் வந்தது..?” என்றார்.

இயக்குநர் அனுராக் காஷ்யப் கூறும்போது, ‘மத்திய அரசின் இந்த திடீர் முடிவு திரையுலகை அச்சுறுத்துகிறது. இனிமேல் சினிமாவில் தைரியமான கருத்துகளை கூற இயக்குநர்கள் தயங்கி நிற்பார்கள். எனக்கு இதில் முன் அனுபவம் இருக்கிறது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்..” என்றார்.

- Advertisement -

Read more

Local News