பாலிவுட் நடிகை கரிஷ்மா சர்மா மும்பையில் ரெயிலில் இருந்து குதித்ததால் பலத்த காயமடைந்துள்ளார். அவருக்கு முதுகெலும்பிலும் தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “படப்பிடிப்பிற்காக சர்ச்கேட்டுக்கு ரெயிலில் செல்ல விரும்பினேன். அதற்காக ரெயில் நிலையத்திற்கு சென்று ரெயிலில் ஏறினேன். ரெயில் புறப்பட்டது, ஆனால் என் நண்பர்கள் ஏற முடியவில்லை. அப்போது நான் சேலை அணிந்திருந்தேன். இருந்தாலும் தைரியமாக குதிக்க முயன்றேன். ஆனால் எதிர்பாராதவிதமாக என் தலையிலும் முதுகெலும்பிலும் அடிபட்டுவிட்டது. தற்போது கடுமையான வலியுடன் சிகிச்சை பெற்று வருகிறேன். உங்கள் அன்பும் ஆதரவும் எனக்கு வலு சேர்க்கும். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
கரிஷ்மா சர்மா ‘பியார் கா பஞ்சநாமா 2’, ‘உஜ்தா சாமன்’, ‘ஹோட்டல் மிலன்’, ‘ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ்’ போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், ‘ராகினி எம்எம்எஸ்: ரிட்டர்ன்ஸ்’ என்ற வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதோடு, ‘பவித்ரா ரிஷ்டா’, ‘சில்சிலா பியார் கா’ போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.