செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், ராணா டகுபதி, பாக்யஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘காந்தா’ படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் பேசிய துல்கர் சல்மான், “இந்தக் கதையை நான் 2019ஆம் ஆண்டு முதல் கேட்டு வருகிறேன். ஒவ்வொரு முறை இயக்குனர் செல்வா சார் 5 மணி நேரம் வரை கதை சொல்லுவார். இதுபோல சுமார் 10 தடவைக்கு மேல் இப்படியான சந்திப்புகள் நடந்திருக்கிறது. படம் தாமதமான போது எனக்குள் எப்போதும் ஒரு பயம், இந்தக் கதை நம்மைவிட்டு போய்விடுமோ என்ற எண்ணம் தான் வந்தது, என தெரிவித்துள்ளார்.

துல்கர் சல்மான் மேலும் பேசுகையில், நான் சென்னையில் வளர்ந்து படித்த பையன். தமிழை மூன்றாவது மொழியாக தேர்வு செய்திருந்தாலும், மலையாள சினிமா வட்டாரங்களில் கூட ‘உன் தமிழ் உச்சரிப்பு மலையாளத்தை விட கிளியரா இருக்கு’ என்று பாராட்டுவார்கள். இந்தக் கதை அந்தக் காலத்திய சென்னையின் சினிமா உலகம், ஸ்டூடியோ, செட்கள், அந்த சினிமா சூழல் ஆகியவற்றின் பின்னணியில் உருவாகியுள்ளது. சின்ன வயதிலிருந்து ராணாவை அறிவேன். நாங்கள் பலமுறை சண்டையிட்டிருக்கிறோம், ஆனால் அது எப்போதும் படத்தை நன்றாக உருவாக்கவே என்பதற்காகத்தான். தமிழில் நான் முதலில் நடித்த ‘வாயை மூடி பேசவும்’ படத்தின் சிறப்பு விருந்தினராக ராணா வந்தார். அந்த நண்பருடன் இப்போது ஒரே படத்தில் நடிப்பது ஒரு பெரும் மகிழ்ச்சி.
சமுத்திரக்கனி சார் உடன் நடித்த அனுபவம் மறக்க முடியாதது. அவர் படித்த புத்தகங்களும், அந்தக் கால சினிமா கதைகளும் எவ்வளவு ஆழமா அவரை பாதித்திருக்கிறது என்பதைக் கேட்கும்போது உணர முடிந்தது. சில படங்களில் நடித்தால் மனநிறைவு கிடைக்கும் — ‘காந்தா’ அதுபோன்ற ஒரு படம்.ஹீரோயின் பாக்யஸ்ரீ நிறைய பயிற்சி எடுத்து சிறப்பாக நடித்துள்ளார். படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியாகிறது. பீரியட் படங்கள் எப்போதும் ஒரு தனித்துவமான அனுபவம் தரும். அவை டைம் மெஷின் மாதிரி, அந்தக் காலத்துக்கே திரும்பிச் சென்ற உணர்வை அளிக்கும். ‘காந்தா’ அதே உணர்வைத் தரும் படம்,” என துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.

