Monday, November 11, 2024

விமானப்படை வீரர் டூ வியக்க வைத்த சிறந்த நடிகர்… டெல்லி கணேஷின் திரை பயணம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் டெல்லி கணேஷ் குணச்சித்திரம், நகைச்சுவை என பன்முக திறமையை வெளிப்படுத்திய இவரோ இன்று நம்மை விட்டுப் பிரிந்தார். சென்னையில் அவரின் இல்லத்தில் நேற்றிரவு தூக்கத்தில் இருந்தபடி இயற்கை எய்தினார்.தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வல்லநாடு என்னும் ஊரில் 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் கணேசன். 1964ல் இந்திய விமானப் படையில் சேர்ந்த அவர், 1974ஆம் ஆண்டு வரை அங்கே பணியாற்றினார். அந்த இடைவெளியில் அவர் “தக்ஷிண பாரத நாடக சபா” என்ற நாடகக் குழுவில் இணைந்து பல நாடகங்களில் நடித்தார்.

நடிகர் ‘சோ’வின் “மனம் ஒரு குரங்கு”, நடிகர் மேஜர் சுந்தர்ராஜனின் “ஒரு பொய்”, “தீர்ப்பு” போன்ற நாடகக் குழுக்களின் நாடகங்களை வாங்கி, அவற்றில் நடித்து அரங்கேற்றம் செய்தும் வந்தார். பின்னர் சென்னை வந்தபோது, டெல்லியில் இவருடன் மேடை நாடகங்களில் இணைந்து நடித்த டிடி சுந்தர்ராஜன் மூலம், நடிகர் ‘காத்தாடி’ ராமமூர்த்தியின் அறிமுகம் கிடைத்தது. இதன் மூலம் “டௌரி கல்யாணம்” என்ற நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சென்னையில் இவர் நடித்த முதல் மேடை நாடகம்தான் இது.

1977ல் இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கிய “பட்டினப்பிரவேசம்” என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரை நடிகராக அறிமுகமானார். இதற்கு முன்பு இவர் வெறும் கணேஷ் என அறியப்பட்டவர், அப்போது பாலசந்தரால் டெல்லி கணேஷ் என்று அழைக்கப்பட்டு பின்னர் அதுவே பெயரானது. 1979ல் இயக்குநர் துரை இயக்கிய “பசி” திரைப்படத்தில், சென்னை பாஷையில் பேசும் ரிக்ஷா தொழிலாளியாக தனது இயல்பான நடிப்பை வெளிக்காட்டி அனைவரின் மனதையும் கவர்ந்தார். இவரது நடிப்பை பாராட்டி, தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகருக்கான விருது வழங்கி கௌரவிதக்கப்பட்டது‌.

கே.பாலசந்தர் இயக்கிய 1985 ஆம் ஆண்டு வெளிவந்த “சிந்து பைரவி” திரைப்படத்தில் இவர் நடித்த ‘குருமூர்த்தி’ என்ற கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் நிறைவாக நிற்கும் வகையில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தினார். 1980களில் “எங்கம்மா மகாராணி”, “தணியாத தாகம்” போன்ற சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். இவரது நாயகனாக நடித்த படங்கள் பெரிதாக பேசப்படாததால், மீண்டும் குணச்சித்திரம், நகைச்சுவை, வில்லன் போன்ற பல்வேறு கதாபாத்திரங்களில் தோன்றிப் பல படங்களில் நடித்தார்.

குறிப்பாக நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த படங்கள் இவருக்கு நல்ல பெயரையும் ரசிகர்களிடமிருந்து நெருக்கத்தையும் வழங்கின. “நாயகன்”, “அபூர்வ சகோதரர்கள்”, “மைக்கேல் மதன காம ராஜன்”, “தெனாலி”, “அவ்வை சண்முகி” போன்ற படங்கள் இதற்கான உதாரணங்களாகும். சமீபத்தில் கமல் நடித்த ‛‛இந்தியன் 2” படத்திலும் நடித்திருந்தார். நடிகர் ரஜினிகாந்துடனும் “பொல்லாதவன்”, “புதுக்கவிதை”, “எங்கேயோ கேட்ட குரல்”, பாபா, “மூன்று முகம்”, “சிவப்பு சூரியன்”, “ஸ்ரீராகவேந்திரர்” உள்ளிட்ட பல படங்களில் நடித்து பாராட்டுதலைப் பெற்றார்.

இயக்குநர் கே.பாலசந்தர் தொடங்கி தமிழ் திரையுலகின் முன்னணி மற்றும் இன்றைய இளம் இயக்குநர்களுடன் பணிபுரிந்த அவர், இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கே.பாக்யராஜ் படங்களில் மட்டும் நடிக்காதது ஆச்சரியமே. நடிகர்கள் விஷ்ணுவர்த்தன், சிரஞ்சீவி, கிரிஷ் கர்னாட், நெடுமுடி வேணு, பிரதாப் போத்தன், ரவீந்தர் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு பின்னணி குரல் டப்பிங் செய்தவர் டெல்லி கணேஷ்.

வெள்ளித்திரையிலிருந்து சின்னத்திரை தொடர்களிலும் தன் நடிப்பை வெளிப்படுத்திய அவர், தனது மகன் மகாதேவனை நாயகனாக்கி “என்னுள் ஆயிரம்” என்ற படத்தை தயாரித்து ஒரு தயாரிப்பாளராகவும் மாறினார். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் 400க்கும் அதிகமான படங்களில் நடித்த டெல்லி கணேஷ் இன்று நிரந்தரமாக துயில இறைவனடி சேர்ந்தார்.

- Advertisement -

Read more

Local News