இசையமைப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இல்லாததால், இசையமைப்பாளர் கார்த்திக் ஹர்ஷா இசையமைத்திருக்கும் முதல் படத்தின் விழாவுக்கு வர மறுத்த இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவர், கார்த்திக் சங்கத்தில் சேர்ந்த ஒரு மணி நேரத்தில் அந்தப் படத்தின் விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
இந்தக் கூத்து ‘3.6.9.’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடந்துள்ளது. இந்த விழாவில் இசையமைப்பாளர் தீனா பேசும்போது, “சில படங்களில் ட்ரெய்லரை பார்த்தால் நமக்கு ஒன்றுமே புரியாது. இந்தப் படத்தின் ட்ரெய்லரும் அதுபோலத்தான் இருந்தது. ஆனால் இதில் என்ன வித்தியாசம் என்றால், இந்த படத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆவலை தூண்டும்விதமாக இந்த ட்ரெய்லர் இருப்பதை மறுக்க முடியாது.
இந்தப் படத்தின் பின்னணி இசையை பார்க்கும்போது ‘ஜுராசிக் பார்க்’ படத்திற்கு கையாண்ட முறையை போல இதிலும் செய்திருப்பார்கள் என்று நினைக்க வைக்கிறது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு முதலில் நான் வருவதாக இல்லை.. காரணம் படத்தின் இசையமைப்பாளர் எங்களது சங்கத்தில் உறுப்பினராக இல்லை. ஆனால் இன்று மாலைதான் அவர் எங்கள் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார். அடுத்த நிமிடமே இந்த விழாவுக்கு கிளம்பி வந்துவிட்டேன். அவர் மிகப் பெரிய அளவில் வருவார்..” என்று பாராட்டினார்.