Touring Talkies
100% Cinema

Friday, September 5, 2025

Touring Talkies

பாகுபலிக்கு பிறகு கதையை தேர்ந்தெடுப்பதில் அதிகம் கவனம் செலுத்துகிறேன் – நடிகை அனுஷ்கா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாகுபலி, அருந்ததி போன்ற படங்கள் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகை அனுஷ்கா, தனது நடிப்பில் உருவான ‘காதி’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இன்று வெளியாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். போதைப்பொருள் கடத்தலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் அனுஷ்கா வித்தியாசமான தோற்றத்தில் நடித்து இருக்கிறார்.

இதுகுறித்து பேட்டியளித்த அனுஷ்கா கூறுகையில், “சூட்டிங் ஆரம்பிக்கும் முதல் வாரத்தில் எனக்கு எப்போதும் பதட்டமாக இருக்கும். அதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தவிக்கிறேன். பொதுவாக ஒரு வாரம் கழித்து நிலைமைகள் சரியாகிவிடும். அதேபோல் பட வெளியீட்டின் முன்பும் பின்பும் எனக்கு மிகுந்த பயம் ஏற்படும். காலப்போக்கில் சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால் இன்றும் அந்த பயம் மாறாமல் உள்ளது.

ஒரு நடிகையாக எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க விரும்புகிறேன். இயக்குனர் கிரிஷ் எப்போதும் எனக்கு சிறந்த கதாபாத்திரங்களை வழங்கியுள்ளார். காதி படக்கதையை முதலில் சொன்னபோது, இந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று நான் நினைத்ததே இல்லை. ஆனால் இந்தக் கதாபாத்திரத்தை நான் செய்ய முடியும் என்று அவர் எனக்கு நம்பிக்கை அளித்தார். பொதுவாக கதை என்னை உற்சாகப்படுத்த வேண்டும். பெண்களை மையமாகக் கொண்ட கதை, பெண் கதாநாயகியாக நடிப்பது போன்ற அம்சங்களே அல்ல. பாகுபலி பிறகு எனது கதைத் தேர்வுகளில் இன்னும் அதிக கவனம் செலுத்துகிறேன்.

கதை எனக்கு பிடித்ததாக இருக்க வேண்டும். படம் எடுக்கப்படும் போது நான் அதை ரசிக்க வேண்டும். வருடங்கள் செல்லச் செல்ல என் வேலையை எப்படி முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டேன். ஒரு படத்திற்கு 6 மாதங்களிலிருந்து ஒரு வருடம் வரை செலவிடுகிறேன் என்றால் அது என் வாழ்க்கையின் ஒரு வருடமே ஆகிறது. அந்த நேரத்தை நான் ஒருபோதும் திரும்பப் பெற முடியாது. அதனால் நல்ல கதைகளைத் தேர்வு செய்வதில் நான் மிகுந்த கவனம் செலுத்துகிறேன். நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே தனிமையை விரும்புபவள். சமூக ஊடகங்களில் நான் அதிகமாகச் சுறுசுறுப்பாக இருப்பதில்லை. அங்கே தினமும் என்ன சொல்லிக்கொண்டிருப்பது என்று எனக்கு புரியாது. என் வாழ்க்கை மிகவும் எளிமையானதும் சலிப்பானதும்தான். ஆனால் அடுத்த தலைமுறை சமூக ஊடகங்களில் முழுமையாக மூழ்கியிருக்கிறது” என்று தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News