1990களில் மலையாள சினிமாவில் அறிமுகமான ஸ்வேதா மேனன், அந்தத் திரைப்படத் துறையில் புகழ் பெற்ற நடிகையாக வளர்ந்தார். மலையாளம் மட்டுமின்றி, இந்திய மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் அவர் நடித்த படங்களில் அரவான், சிநேகிதியே, துணை முதல்வர், நான் அவனில்லை 2 ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை. தனது சிறந்த நடிப்புக்காக கேரள அரசின் விருதுகளை இருமுறை பெற்றுள்ளார். ஜெயபாரதி நடித்த “ரதிநிர்வேதம்” படத்தின் மறுஅமைப்பிலும் நடித்துள்ளார். தற்போது திரைப்படத்துக்கு இணையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சுறுசுறுப்பாக பங்கேற்று வருகிறார்.

மலையாள நடிகர்கள் சங்கமானது “அம்மா” என்ற பெயரில் இயங்கி வருகிறது. மோகன்லால் சமீப வரை இதன் தலைவராக இருந்தார். ஆனால் பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் நீதிபதி ஹேமா கமிஷன் வெளியிட்ட அறிக்கையின் தாக்கத்தால், அவர் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து மற்ற நிர்வாகிகளும் பதவியை விட்டு விலகினர். இந்நிலையில், புதிய நிர்வாகத் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் நடைபெற்ற பொதுக்குழுவில், மோகன்லாலின் பெயர் மீண்டும் தலைவர் பதவிக்காக முன்மொழியப்பட்டது. ஆனால் அவர் இனி போட்டியிடமாட்டார் என்று தெளிவாக தெரிவித்துவிட்டார். இதையடுத்து, புதிய நிர்வாகத்திற்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அதில், நடிகை ஸ்வேதா மேனனும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்துள்ளார். ஹேமா கமிஷன் அறிக்கைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததோடு, மோகன்லால் மீண்டும் தலைவர் ஆவார் என விருப்பம் தெரிவித்தவர்களில் இவரும் ஒருவர். மோகன்லால் விலகிய பிறகு ஏற்பட்ட போட்டியிலும், ஸ்வேதா மேனனின் வேட்பு முக்கியத்துவம் பெறுகிறது.