2005-ம் ஆண்டு, ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் நடித்த ‘சச்சின்’ திரைப்படம் வெளியானது. இதில் ஜெனிலியா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தை தயாரித்தவர் தாணு. வடிவேலு, ரகுவரன், சந்தானம் போன்ற பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணியாற்றிய இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தின் வெளியீட்டு 20ஆம் ஆண்டு நிறைவையொட்டி, கடந்த 18ஆம் தேதி ‘சச்சின்’ திரைப்படம் மீண்டும் திரையிடப்பட்டது. ரீ-ரிலீஸான இப்படத்தை விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனையடுத்து, உலகம் முழுவதும் இந்த திரைப்படம் ரூ.15 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் விஜய் மற்றும் ஜெனிலியாவுக்கிடையிலான இனிமையான கனெக்ஷன் ரசிகர்களிடையே பெரிதும் பேசப்பட்டது. இந்த படத்தில் ‘ஷாலினி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஜெனிலியா, விஜய் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்து ஒரு உணர்ச்சிவசப்படுத்தும் வீடியோவினை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை தயாரிப்பாளர் தாணு தனது எக்ஸ் கணக்கில் பகிர்ந்துள்ளார். இப்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.