நியூயார்க்கில் இருந்து வெளியிடப்படும் புகழ்பெற்ற பத்திரிகையான ‘போர்ப்ஸ்’, ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மிகவும் பிரபலமான 30 பேரின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலில், பொழுதுபோக்கு, கல்வி, வணிகம், பொருளாதாரம், விளையாட்டு, இசை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களின் பெயர்கள் இடம்பெறும்.
அந்த வரிசையில், 2025ஆம் ஆண்டிற்கான போர்ப்ஸ் 30 பிரபலங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. பொழுதுபோக்கு பிரிவில், நடிகைகளில் இருந்து அபர்ணா பாலமுரளி மட்டுமே இடம் பிடித்துள்ளார். அவருடன், பாலிவுட் நடிகர் ரோகித் சரத் என்பவரும் இந்த பிரிவில் இடம்பெற்றுள்ளார்.
இந்த பட்டியலில் இடம்பெற அவர்களின் கடந்த ஆண்டு கிடைத்த புகழும், நடிப்பு திறனும் முக்கிய காரணமாக இருந்துள்ளது. அபர்ணா பாலமுரளி, கடந்த ஆண்டு தமிழ் திரையுலகில் தனுஷ் இயக்கிய ‘ராயன்’, மலையாளத்தில் ‘கிஷ்கிந்தா காண்டம்’ மற்றும் ‘ருத்ரம்’ போன்ற திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
அவரது திரையுலகப் பயணம் 2016ல் மலையாளத்தில் பஹத் பாசிலுடன் ‘மகேஷ்ஷிண்டே பிரதிகாரம்’ திரைப்படத்துடன் தொடங்கியது. அதன்பிறகு, தமிழில் ‘எட்டு தோட்டாக்கள்’, ‘சர்வம் தாள மயம்’ போன்ற படங்களில் நடித்தார். 2020 ஆம் ஆண்டு, சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘சூரரைப்போற்று’ திரைப்படம் அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுத் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.