Friday, April 12, 2024

இயக்குநர் அனு மோகனை மூன்று முறை ஏமாற்றிய நடிகர் சத்யராஜ்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் அனு மோகன் கோவை பகுதிக்காராக இருந்ததால் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே நடிகர் சத்யராஜ், கோவை சரளா ஆகியோரை தெரிந்து வைத்திருக்கிறார்.

ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய அத்தனை படங்களிலும் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவராக இருந்தபோதிலும் அனு மோகனின் இயக்கத்தில் நடிக்க சத்யராஜ் பெரிதும் தயங்கியிருக்கிறார்.

அனு மோகனுக்கு முதன்முதலில் ஒரு படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தபோது அவர் அணுகியது சத்யராஜைத்தான். பொள்ளாச்சியில் படப்பிடிப்பில் இருந்த சத்யராஜை தேடிப் போய்ப் பார்த்து கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அனு மோகன்.

கதையைக் கேட்ட சத்யராஜ், “கதை நல்லாத்தான் இருக்கு. ஆனால் இப்போ நான் ஓல்டு கெட்டப் போட வேண்டாம்ன்னு நினைச்சிருக்கேன். அதுனால வேண்டாம். நீங்க பிரபுவை அப்ரோச் பண்ணுங்க. அவருக்குப் பொருத்தமா இருக்கும்..” என்று பிரபுவிடம் டைவர்ட் செய்துவிட்டாராம்.

பிரபுவிடம் அனு மோகன் சென்று இந்தக் கதையைச் சொன்னவுடன் பிரபு “கதை நல்லாயிருக்கே.. நான் நடிக்கிறேன்…” என்று சொல்லி நடிக்க ஒத்துக் கொண்டார். அந்தப் படம்தான் 1989-ல் வெளியான ‘நினைவுச் சின்னம்’ திரைப்படம்.

2 வருடங்கள் கழித்து மீண்டும் சத்யராஜிடம் போய் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார் அனு மோகன். இந்த முறை கதையைக் கேட்டுவிட்டு “இப்போ இந்த மாதிரி கதைல நான் நடிக்கிறதில்லையே..” என்று இழுத்த சத்யராஜ் அப்புறம் பார்ப்போம் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.

ஆனால், இதற்குப் பின்பு சில நாட்கள் கழித்து இயக்குநர் கே.சுபாஷ் அனு மோகனை சந்தித்து, சத்யராஜிடம் ஏதோ கதை சொன்னீங்களாமே.. அந்தக் கதையை வைச்சு நான் படமாக்கலாம்ன்னு நினைக்கிறேன். கதையைத் தர்றீங்களான்னு கேட்டிருக்கிறார். எப்படியோ தன் கதை படமானால் போதும் என்று சொல்லி அந்தக் கதையைக் கொடுத்திருக்கிறார் அனு மோகன்.

இந்தக் கதையில் உருவான திரைப்படம்தான் 1992-ம் ஆண்டு சத்யராஜ்-பானுப்பிரியா நடிப்பில் கே.சபாஷ் இயக்கத்தில் வெளியான ‘பங்காளி’ திரைப்படம்.

இதன் பின்பும் முயற்சியைக் கைவிடாமல் சத்யராஜிற்கு மீண்டும் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார். கதை முழுவதையும் கேட்டுவிட்டு “நல்லாத்தான் இருக்கு. யோசித்து சொல்றனே…” என்று சொல்லியனுப்பியிருக்கிறார் சத்யராஜ்.

சில நாட்கள் கழித்து சத்யராஜ் அனுப்பி வைத்ததாகச் சொல்லி இயக்குநர் குரு தனபால் அனு மோகனை நேரில் வந்து சந்தித்திருக்கிறார். “சத்யராஜ்கிட்ட ஒரு கதை சொன்னீங்களாமே.. அந்தக் கதையை எனக்குக் கொடுக்குறீங்களா..? நான் அவரை வைச்சு படம் பண்ணப் போறேன்..” என்று கேட்டிருக்கிறார்.

இந்த முறையும் ஏமாற்றத்துடன் அனு மோகன் தன் கதையைக் கொடுத்தனுப்பியிருக்கிறார். அந்தக் கதையில் உருவான படம்தான் சத்யராஜின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கிய 1994-ல் வெளியான ‘தாய் மாமன்’ திரைப்படம்.

இதன் பின்பு அனு மோகனுக்கே படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போக.. சத்யராஜவை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு என்னும் அவரது நீண்ட நாள் ஆசை நிராசையாகவே போய்விட்டது..!

- Advertisement -

Read more

Local News