கன்னட திரையுலகில் பல ஆண்டுகளாக டாப் ஸ்டார் அந்தஸ்தில் இருந்தவர் மறைந்த நடிகர் விஷ்ணுவர்தன். அவரின் நினைவாக பெங்களூருவில் உள்ள அபிமன் ஸ்டுடியோவில் ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் அங்குள்ள கட்டுமானப் பணிகள் காரணமாக, அந்த நினைவிடம் இடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் ரசிகர்களிடமும் திரையுலகத்தினரிடமும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அவருக்காக அரசு செலவில் மைசூரில் புதிய நினைவிடம் கட்டப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்தது.

ஆனால், விஷ்ணுவர்தனின் நினைவிடம் இடிக்கப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியும் வருத்தமும் அளித்தது. இதனால், அவர்கள் தங்களது சொந்த செலவில் புதிதாக நினைவு மண்டபம் அமைக்கத் தொடங்கினர். இந்த செய்தி நடிகர் கிச்சா சுதீப்புக்கு தெரிய வந்ததும், அவர்களை சந்தித்து, பெங்களூருவில் தன்னுடைய சொந்தமான அரை ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கி, அதில் விஷ்ணுவர்தனின் நினைவிடம் கட்டிக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். எப்போதும் விஷ்ணுவர்தனை தனது முன்னோடி மற்றும் வழிகாட்டி எனக் குறிப்பிட்டு வந்த சுதீப், அவரின் நினைவிடம் இடிக்கப்பட்டதை பார்த்தபோது தனது இதயம் நொறுங்கியதாக உணர்ந்ததாகவும் கூறியிருந்தார்.
இதன் வெளிப்பாடாக, அவர் தன்னுடைய நிலத்தையே நினைவிடத்திற்காக தாராளமாக வழங்கியுள்ளார். இதுகுறித்து விஷ்ணுவர்தன் ரசிகர் மன்றம் தெரிவித்ததாவதுகர்நாடக அரசு மைசூரில் நினைவிடம் கட்டுவதாக அறிவித்திருப்பது தனியே நடக்கும் ஒன்று. அதற்கு போட்டியாகவே இதை நாங்கள் செய்யவில்லை. எங்களது அபிமான நடிகருக்காக ஒரு காணிக்கையாகவும், பெங்களூருவில் இருக்கும் ரசிகர்கள் எளிதில் அணுகக் கூடிய இடமாகவும், எங்கள் மனநிறைவைப் பெறவும் இந்த நினைவிடத்தை அமைக்கிறோம்” என்று தெரிவித்தனர்.