விரைவில் மீண்டும் துவங்கவுள்ள ‘இந்தியன்-2’ படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர் கார்த்திக்கும் இணைந்து நடிக்கப் போவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த ‘இந்தியன்-2’ படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், விவேக், ரகுல் ப்ரீத் சிங்க், பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, மனோபாலா, சித்தார்த் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த ‘இந்தியன்-2’ படம் பலவித சர்ச்சைகளுக்குப் பிறகு, நீதிமன்ற வழக்குகளுக்குப் பிறகு அடுத்த மாதம் மீண்டும் துவங்கவுள்ளது.
படத்தில் ஏற்கெனவே நடித்து வந்த நடிகை காஜல் அகர்வால் படம் துவங்கி பாதியில் நின்ற பிறகு திருமணமாகி குழந்தையும் பெற்றுவிட்டார். ஆனாலும் அவர் மீண்டும் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.
இந்த ‘இந்தியன்-2’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் விவேக் திடீரென்று மரணமடைந்துவிட்டதால் அவர் சம்பந்தப்பட்ட போர்ஷன்களை மீண்டும் வேறு நடிகரை வைத்து படமாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது கிடைத்துள்ள தகவலின்படி நடிகர் கார்த்திக். நடிகர் விவேக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் ‘இந்தியன்’ முதல் பாகத்தில் நடித்திருந்த நெடுமுடி வேணு இறந்துவிட்டதால் அவரது கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரத்தை நடிக்க வைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர்-13ம் தேதியிலிருந்து சென்னையில் துவங்கவுள்ளது. இதற்காக பிரசாத் லேப்பிலும், ஈ.வி.பி. பிலிம் சிட்டியிலும் புதிதாக செட்டுகள் போடப்பட்டு வருகின்றன.