பஹல்காம் தாக்குதலை அடுத்து, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது.

இந்த நடவடிக்கைக்குப் பின்னர், கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் எல்லையை மீறி இந்திய பகுதியை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தி வந்தது. இந்த தாக்குதல்களை இந்திய ராணுவம் தொடர்ந்து தடுக்க முடிந்தது. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 10-ஆம் தேதி அறிவித்தார். இதனை இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் உறுதி செய்தன.ஆனால், அதே நாளில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாகத் தடுக்க முடிந்தது. அதன் பின், ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் நேற்று இரவு அமைதி நிலவியதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.
இந்த சூழ்நிலையில், இந்திய ராணுவ வீரர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆபத்தில் உறுதியுடன் மோதிய நமது ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம். ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், அரியானா உள்ளிட்ட எல்லைமாநில மக்களின் தைரியம் பாராட்டுதற்குரியது. பயங்கரவாதத்திற்கு முன் இந்தியா ஒருபோதும் வளைந்து கொடுக்காது. ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை கொண்டாடுவது மட்டுமல்லாமல், இந்தியாவை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.