பார்க்கிங் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கே. எஸ். சினிஷ் தயாரிக்கும் ‘நிஞ்சா’, ‘சூப்பர் ஹீரோ’ படங்களின் டைட்டில் அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. ‘சூப்பர் ஹீரோ’ படத்தில் அர்ஜூன் தாஸ், தேஜூ அஸ்வினி நடிக்கின்றனர். ‘நிஞ்சா’ படத்தில் பைனலி பாரத் நடிக்கிறார். இந்த படங்களுக்கான பூஜை நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், மெர்ச்சி சிவா, கவின், இயக்குநர்கள் வெங்கட்பிரபு, நெல்சன், ஆதிக் ரவிச்சந்திரன், நித்திலன், பார்க்கிங் ராம்குமார் ஆகிய பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், நான் இயக்குநர் நெல்சனிடம் உதவி இயக்குநராக இருந்த காலத்தில், ஆரம்பத்தில் மெரினா பீச்சில் அமர்ந்து கதை, வசனம் எழுதுவது வழக்கம். அப்போது எழுதிக் கொண்டிருந்தது ‘வேட்டை மன்னன்’ கதை. அப்போது அந்த படத்துக்கான தயாரிப்பாளர் அல்லது ஹீரோ எதுவும் உறுதியாகவில்லை. பிறகு ஒரு ஆபீஸ் எடுத்தோம். அப்போது அங்கே சினிஷ் வந்தார். அவர் நெல்சனின் கல்லூரி நண்பர் என்பதால் உரிமையாக பேசுவார்.
அப்போது அவர் என்னிடம், நீங்க என்ன ஆகணும்னு ஆசைபடுறீங்க என்று கேட்டார். அவரை சிரிக்கச் செய்வதற்காக நான், நான் ஹீரோ ஆகப்போகிறேன் என்று சொன்னேன். அதற்கு அவர், அதை எல்லாம் விடுங்க, உங்களுக்கு ஏன் இந்த வேலை? உங்களுக்கு காமெடி வருது, அதை பண்ணுங்க. டான்சர் சதீஷ் ஹீரோ ஆகட்டும், நீங்க அதில் காமெடி பண்ணுங்க என்று அட்வைஸ் செய்தார். பலமுறை இப்படித்தான் என் மீது அந்த அட்வைஸைச் செய்து கொண்டே இருந்தார். காலம் கடந்து நான் உண்மையில் ஹீரோ ஆன பின்பு, சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து அவர், அன்னிக்கு நான் அப்படி பேசியிருக்கக் கூடாது என்று சொன்னார். அதற்கு நான், நான் அதை மறந்தே விட்டேன்” என்றேன். அவருடன் தியேட்டரில் படம் பார்க்கும்போது, கராத்தே படிக்கும் மாதிரி கத்தி கொண்டே இருப்பார்.
சினிஷ், இது தனது 5வது படம் என்று கூறியபோது, முன்னதாக எடுத்த நான்கு படங்கள் எது என்று இயக்குநர் நெல்சன் கலாய்த்தார். சினிஷ் சினிமாவில் நீண்ட காலமாக இருக்கிறார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக தொழிலில் உள்ளவர். ‘பார்க்கிங்’ படத்துக்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். அவர் மிகவும் திட்டமிட்டவர். சுதன் அவர்களுடன் சேர்ந்து ‘பார்க்கிங்’ படத்தை தயாரித்தார். அப்போது இந்த படத்துக்கு எந்த விருது கிடைத்தாலும் அதை நான்தான் வாங்குவேன் என முன்பே ஒப்பந்தம் போட்டதாகவும் சிரித்துக்கொண்டே கூறினார் சினிமா பின்னணி இல்லாதவர் என்றாலும் தனி ஆளாக சினிமாவில் வெற்றி பெற்று, நிறைய நண்பர்களை சம்பாதித்துள்ளார். இந்த படமும் நிச்சயம் வெற்றி பெறும் என்று அவர் உறுதியாக கூறினார்.

