தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித், நடிப்பு , கார் ரேஸிங் என பிசியாக வலம் வருகிறார். இந்நிலையில் அஜித்குமார் பிரபல ஊடகத்திற்கு அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில் பல விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார். அதில், ரசிகர்கள் என்மீது காட்டும் அன்புக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அதேசமயம் அந்த அன்பின் காரணமாக குடும்பத்துடன் வெளியே செல்வதில்லை. என் மகனை கூட பள்ளிக்கு என்னால் அழைத்து செல்ல முடியாது. சில நேரங்களில், பணிவாக என்னை கிளம்புங்கள் என்று சொன்ன தருணங்களும் ஏற்பட்டுள்ளன என்றார்.

மேலும், கரூரில் விஜய்யின் த.வெ.க பிரச்சாரத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவம் குறித்தும் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில், நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல, நாம் அனைவருக்கும், ஊடகங்களுக்கும் அதில் பங்கு உண்டு. கூட்டம் திரட்டுவதை பெரிய விஷயமாக்குவதை நிறுத்த வேண்டும். கிரிக்கெட்டில் கூட்டம் கூடினாலும் இப்படி நடப்பதில்லை என்றார்.
அதேபோல், தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சி, பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது இது நம் திரையுலகை உலகளவில் தவறாகக் காட்டுகிறது. ரசிகர்களின் அன்புக்காகவே நடிகர்களான நாங்கள் உழைக்கிறோம். ஆனால், உயிரைப் பணயம் வைத்து அன்பு காட்ட வேண்டாம்; அன்பை காட்ட வேறு வழிகள் உண்டு. முதல் நாள் முதல் காட்சி கலாச்சாரத்தை நாம் ஆதரிக்கக் கூடாது. ஊடகங்களும் பொறுப்புடன் இருக்க வேண்டும்.
புகழ் என்பது இரு பக்க கூர்மையான வாள் போன்றது. வசதி மற்றும் நல்ல வாழ்க்கை முறையை தாராளமாக வாரி வழங்கும். ஆனால், அதே நேரத்தில் உங்களுக்கு மிகவும் முக்கியமான விஷயங்களை அது பறித்துவிடும் என மனம் திறந்து பேசியுள்ளார்.

