நாயகனாக பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் இந்தக் கதையில், அவர் தனது நண்பர்களுடன் இணைந்து “சர்ப்ரைஸ் டியூட்” என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் ஏற்பாடு செய்து மகிழ்ச்சியை பரப்பும் ஒருவராக அறிமுகமாகிறார். அவருக்கு துணையாகவும், நெருங்கிய தோழியாகவும் தாய்மாமாவின் மகளான நாயகி மமிதா பைஜு இருக்கிறார். இருவருக்கும் இடையில் நல்ல நட்பு நிலவுகிறது. ஆனால், ஒரு கட்டத்தில் மமிதா பைஜுவுக்கு பிரதீப்பின் மீது காதல் உருவாகிறது. ஆனால் பிரதீப், “நான் உன்னை ஒரு நல்ல தோழியாகத்தான் பார்க்கிறேன், காதலியாக அல்ல” என்று கூறி அவளது காதலை மறுக்கிறார்.

காலம் சென்றபோது, ஆறு மாதங்கள் கழித்து பிரதீப்புக்கே மமிதா பைஜுவின் மீது காதல் எழுகிறது. ஆனால், அவர் காதலை வெளிப்படுத்தும் சமயத்தில், மமிதா பைஜு வேறு ஒருவரை காதலிக்கிறேன் என்று கூறி அவரது காதலை ஏற்க மறுக்கிறார். இதனால் மனம் உடைந்த பிரதீப், அவளது காதலை அவளது காதலருடன் இணைத்து வைக்க முடிவு செய்கிறார். ஆனால் அதற்குள் சரத்குமார், பிரதீப் மற்றும் மமிதா பைஜு இருவருக்கும் திருமண ஏற்பாடுகளை செய்து விடுகிறார். இறுதியில், பிரதீப் ரங்கநாதன் மமிதா பைஜுவை திருமணம் செய்தாரா அல்லது அவளது காதலரை அவளுடன் இணைத்தாரா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் பிரதீப் ரங்கநாதன் தனது தனித்துவமான நடிப்பு பாணியில் காதல், சோகம், நகைச்சுவை என அனைத்திலும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக பாத்ரூமில் அழும் காட்சி பார்வையாளர்களை கண்கலங்க வைக்கிறது. நாயகியாக நடித்த மமிதா பைஜு, துள்ளலான, சுறுசுறுப்பான பெண் கதாபாத்திரமாக சிறப்பாக நடித்துள்ளார். பிரதீப்புடன் நடக்கும் சண்டை, கோபம், உணர்ச்சி கலந்த காட்சிகள் ரசிகர்களை ஈர்க்கின்றன.
சரத்குமாரின் நடிப்பு படத்திற்கு ஒரு பெரிய பலமாக அமைந்துள்ளது. காமெடி, வில்லத்தனம், ஜாதி வெறி போன்ற பல்வேறு மனநிலைகளில் அனுபவமிக்க நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். “இன்றும் ஜாதியை பிடிக்கவில்லை என்று சொல்லுபவர்கள் சாகட்டும்; ஆனால், ஏன் மற்றவரை சாகடிக்கிறீர்கள்?” என்ற சமூகச் செய்தியை இளைய தலைமுறைக்கேற்ற வகையில் உரக்கச் சொல்கிறார் இயக்குனர் கீர்த்தீஸ்வரன்.
ஜாதி ஒரு துருவ சக்தியாக இருந்தாலும், படம் முழுவதும் காதல், நட்பு, காமெடி, சுவாரஸ்யம் ஆகிய அம்சங்களை இணைத்து திரைக்கதை விறுவிறுப்பாக நகர்த்தியுள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் மனதை கவர்கின்றன. பின்னணி இசை கூடுதல் பலம் சேர்க்கிறது. நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.