தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் சாய் பல்லவியின் சினிமா பயணம், மற்ற நடிகைகளின் பயணத்துடன் ஒப்பிடும்போது தனித்துவம் வாய்ந்ததாகும். பல முன்னணி நடிகர்களின் படங்களில் கவர்ச்சி நாயகியாக நடித்து முன்னேறுவதை அவர் தேர்ந்தெடுக்கவில்லை. அதேசமயம், நாயகிக்கு முக்கியத்துவம் இல்லாத சாதாரண கதாபாத்திரங்களிலும் அவர் நடிக்கவில்லை. ஒரு படத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார் என்றாலே அந்தப்படம் நிச்சயமாக தரமான படமாக இருக்கும் என்ற நம்பிக்கையை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளார்.

கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்கமாட்டேன் என்ற உறுதியான கொள்கையை பின்பற்றி வந்தபோதும், இத்தகைய உயரத்தை எட்டிய நடிகை தென்னிந்திய திரையுலகில் வேறு யாரும் இல்லை என்று சொல்லலாம். சாய் பல்லவி கடைசியாக நடித்த திரைப்படம் ‘அமரன்’. சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த அந்தப் படம் கடந்த ஆண்டு தீபாவளியில் வெளியானது. படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
ஆனால், அந்தப் படத்திற்குப் பிறகு இதுவரை எந்தத் தமிழ் படத்திலும் சாய் பல்லவி கமிட் ஆகவில்லை. வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள படத்தில் சாய் பல்லவியை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. மேலும், கடந்த வாரம் தமிழக அரசு சாய் பல்லவிக்கு கலைமாமணி விருது அறிவித்தது. விருது பெற்ற பலரும் அரசுக்கு நன்றி தெரிவித்த நிலையில், சாய் பல்லவி இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. தற்போது அவர் பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக உருவாகும் இராமாயணா படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

