பூடான் ராணுவத்தின் ஏலத்தில் விற்பனைக்கான சொகுசு கார்களை வாங்கி இந்தியாவில் மறுபதிவு செய்து வரி ஏய்ப்புடன் விற்பனை செய்து வந்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் மலையாள நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ், அமித் சக்காலைக்கல் ஆகியோரின் வீட்டுகளில் சோதனை நடத்தப்பட்டு, துல்கர் சல்மானின் வீட்டிலிருந்து இரண்டு கார்கள் கைப்பற்றப்பட்டன. அவர் பெற்றுள்ள மேலும் இரண்டு கார்களின் விவரங்களை சுங்கத்துறை தொடர்ந்து விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் துல்கர் சல்மான், அந்த கார்களை சட்டபூர்வமாக வாங்கியுள்ளதைத் தெரிவித்தும், அவற்றை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: “நான் சட்டப்படி கார்களை வாங்கியுள்ளேன். ஆனால் எந்த ஆவணங்களையும் சரிபார்க்காமல் சுங்கத்துறை என் கார்களை கைப்பற்றியுள்ளது. அவற்றை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுங்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்ட விதம் என் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது” என்று துல்கர் சல்மான் மனுவில் தெரிவித்துள்ளார்.