மலையாள திரையுலகில் உணர்ச்சிப்பூர்வமான கதையம்சங்களைக் கொண்ட திரைப்படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் சத்யன் அந்திக்காடு. இவர் இதுவரை 55க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ஹிருதயபூர்வம் திரைப்படத்தையும் இவர் இயக்கியிருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

மோகன்லாலுடனான தனது திரையுலக பயணத்தை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், 1994ல் பிங்கமி என்ற படத்தை மோகன்லாலை வைத்து இயக்கினேன். பின்னர் நான் எழுதிய ஒரு கதையில் மோகன்லால் நடித்தால் மட்டுமே சிறப்பாக அமையும் என்று நினைத்ததால் அவரிடம் கால்ஷீட் கேட்டேன். ஆனால் அப்போது அவர் மிகுந்த பிஸியாக இருந்ததால் அவரை வைத்து அந்தப் படத்தை இயக்க முடியவில்லை. அதனால் அவர்மீது எனக்கு ஒரு கோபம் ஏற்பட்டது. அந்தக் கோபத்தினால்தான் அடுத்த 12 ஆண்டுகள் அவர் உடன் எந்தப் படத்திலும் இணைந்து பணியாற்றவில்லை.
பின்னர் 2006-ல் ரசதந்திரம் படத்தில் தான் மீண்டும் நாங்கள் இணைந்தோம். ஆனால் 12 ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் என் படத்தில் நடிக்க வந்தபோது, அது நேற்று தான் படப்பிடிப்பில் இருந்து கிளம்பிச் சென்றவர் மறுநாளே திரும்பி வந்தார் போலவே எனக்கு தோன்றியது. அதுதான் மோகன்லால். ஆனால் அவர் மீது இருந்த என் அந்தக் கோபத்தை இன்று வரை அவருக்குத் தெரியாது. இப்போதுதான் அதை வெளிப்படையாகச் சொல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.