Friday, November 22, 2024

சினிமா வரலாறு-11 கலைவாணரின் 11 கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்த தயாரிப்பாளர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கலைவாணர்  என்.எஸ்.கிருஷ்ணனுடன் இணைந்து பிரபல படத் தயாரிப்பாளரான ஏ..எல்..சீனிவாசன் தயாரித்த படம் ‘பணம்.’

அந்தப் படத்திற்கு வசனம் எழுதியவர் கலைஞர் மு.கருணாநிதி.  நாயகனாக சிவாஜி கணேசனும்,  நாயகியாக பத்மினியும்  நடித்த அந்தப் படத்தை இயக்கியவர் என்.எஸ்.கிருஷ்ணன். அவர் இயக்கிய இரண்டாவது படமான அந்தப் படத்திற்கு பல சிறப்புகள் உண்டு.

சிவாஜியும் பத்மினியும் இணைந்து நடித்த முதல் படம் அது. சிவாஜியும்  என்.எஸ்.கிருஷ்ணனும்  இணைந்த பணியாற்றிய முதல் படமும் அதுதான்.

எம்.ஜி.ஆர் நடித்த ‘ஜெனோவா’ திரைப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆகி இருந்தாலும் எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகிய இருவரும் இணைந்து  இசை அமைத்து வெளியான முதல் படமாக ‘பணம்’ படமே அமைந்தது. இந்தப் படத்தின் டைட்டிலில்தான் அவர்கள் இருவரின் பெயரும் முதன் முதலாக இடம் பெற்றது.

‘பணம்’ படம் உருவான காலக்கட்டத்தில் டி.பாலசுப்ரமணியம் என்ற நடிகரும், ‘அப்பா’ துரைசாமி என்ற நடிகரும் தந்தை வேடத்தில் நடிப்பதில் புகழ் பெற்றவர்களாக இருந்தனர். பெரும்பாலும் எல்லா படங்களிலும் அவர்கள்தான் தந்தை வேடத்தில் நடித்து வந்தனர்.

அப்படிப்பட்ட  சூழ்நிலையில்  ‘பணம்’ படத்தில் இடம் பெற்றிருந்த மிகவும் முக்கியமான ஒரு அப்பா வேடத்தில் நடிக்க ஒல்லியாக இருந்த ஒரு இளைஞரை அழைத்துக் கொண்டு வந்த கலைவாணர் அந்த வேடத்தை அவருக்கே கொடுக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தபோது  ஏ.எல்.சீனிவாசனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

அவர் தயங்குவதைப் பார்த்த கலைவாணர் “யோசிக்காதப்பா.. இவன் அந்த பாத்திரத்தில அபாரமாக நடிப்பான்..” என்றார். அநியாயத்துக்கு ஒல்லியாக இருந்த அந்த இளைஞனால் அந்த வலுவான தந்தை பாத்திரத்தில் நடிக்க முடியுமா என்று சீனிவாசன் யோசித்துக் கொண்டிருந்தபோது “இவனுக்கு சம்பளமாக ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிடு” என்று இன்னொரு குண்டைத் தூக்கிப் போட்டார் கலைவாணர்.

அவர் சொன்னதைக் கேட்டு ஏ.எல்.சீனிவாசன் அதிர்ச்சி அடைந்தார் என்றால் அவரைப் போல இரு மடங்கு அதிர்ச்சி அடைந்தார் அந்த அப்பா நடிகர்.

ஏனென்றால் அந்த அப்பா நடிகர் அப்போது நாடகத்தில் நடிக்க வாங்கிக் கொண்டிருந்த சம்பளம் வெறும் பத்து ரூபாய். அதுவும் ஒரு நாளைக்கு அல்ல – ஒரு மாதத்துக்கு.

ஒரு  மாதத்துக்கு பத்து ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவருக்கு ஒரு படத்தில் நடிக்க ஆயிரம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்டால் அவர் அதிர்ச்சி அடையாமல் என்ன செய்வார்..?

வேறு வழியின்றி கலைவாணர் சொல்கிறாரே என்பதற்காக அந்த நடிகருக்கு ஆயிரம் ரூபாயை ஏ.எல்.எஸ்.கொடுத்தபோது “வாங்கிக்க… உன் நடிப்புத் திறமைக்கு இதெல்லாம் ஒரு சம்பளமேயில்லை…” என்றாராம்  கலைவாணர். 

இப்படி கலைவாணரால் போற்றப்பட்ட நடிகர் தமிழ்த் திரைப்பட ரசிகர்கள்  எல்லோருக்கும் நன்கு அறிமுகமான நடிகர்தான். அவர் பெயர்  கே.ஏ.தங்கவேலு.

“உன் நடிப்புத் திறமைக்கு இதெல்லாம் ஒரு சம்பளமேயில்லை” என்று கலைவாணர் சொன்னதை  ‘பணம்’ திரைப் படத்திலே எல்லா காட்சிகளிலும் நிரூபித்திருந்தார் தங்கவேலு.

‘பணம்’ படத்தைத் தயாரித்த ஏ.எல்.சீனிவாசன் 1957-ம் ஆண்டு சிவாஜி – பானுமதி ஜோடியாக நடிக்க ‘அம்பிகாபதி’ என்ற படத்தைத்  தயாரித்தார்.

ஏ..எல்.சீனிவாசன் எடுத்த முதல் திரைப்படமான ‘பணம்’ படத்தில் அவருடன் பங்குதாரராக இருந்த  கலைவாணர்  என்.எஸ்.கிருஷ்ணன், ‘அம்பிகாபதி’ திரைப்படத்தில் ஒரு நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

அந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது  கலைவாணரை மன ரீதியாக பல பிரச்னைகள் பாதித்தன. அதற்கு அப்போது சினிமா உலகில் சிலர் நடந்து கொண்டவிதமும் முக்கியமான காரணமாக அமைந்தது.

தனது மன ஓட்டத்தை ஒரு பத்திரிகையில் கட்டுரையாக வடித்த அவர் “கலை உலகிற்கு உள்ளே வருகின்றவர்களின் மனம் எப்போது பணத்தை மட்டுமே நாடிச்  செல்லத் தொடங்குகிறதோ… அப்போது கலை நிச்சயமாக பாதிக்கப்படும். அப்படித்தான் இப்போது தமிழ்ப் பட உலகம் பாதிக்கப் பட்டுவருகிறது.

கலை உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் தங்களை ஒரே குடும்பத்தினராக எண்ணிப்  பழக வேண்டும். அந்த நிலை இன்றைய தமிழ்ப் பட உலகில் இருக்கிறதா என்றால் இல்லை. ஒருவரையொருவர் பெரும்பாலும் உதட்டளவில்தான் நேசிக்கிறார்கள்.. உள்ளமெல்லாம் போட்டியும்,  பொறாமையும்தான் நிரம்பியிருக்கிறது…” என்று அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார் கலைவாணர்.

இந்தக் கருத்துக்களை கலைவாணர் வெளியிட்டது 1957-ம் ஆண்டில். ஆனால், துரதிருஷ்டவசமாக இன்றுவரை கலையுலகில் அதே நிலை இருந்து வருவதுதான் மிகப் பெரிய சோகம். 

1957-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி தென்னிந்திய சினிமா பத்திரிகையாளர் சங்கம்  சுதந்திரத் திருநாளை கொண்டாடியபோது என்.டி. ராமாராவ் கலந்து கொண்ட கதம்ப நிகழ்ச்சி ஒன்றை இயக்கிய கலைவாணர், தனது மனைவி மதுரத்துடன் இணைந்து ஒரு நகைச்சுவை நாடகத்தையும் அந்த விழாவில் நடத்தினார்.  அதுதான் அவர் கலந்து கொண்ட கடைசி விழா.

ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி மஞ்சள் காமாலை நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக சென்னை பொது மருத்துவமனையில் சேர்க்கபட்ட கலைவாணரின் உடல் நிலை ஆகஸ்ட் 29-ம் தேதி இரவு மிகவும் மோசமானது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 3௦-ம்தேதி பகல் 11 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

அந்த மரணச் செய்தி ஏ.எல்.சீனிவாசனை இடியெனத் தாக்கியது. செய்தி கேட்டு அப்படியே அதிர்ந்து போனார் அவர்.

ஏனெனில், ‘அம்பிகாபதி’ படத்தில் கலைவாணர் நடிக்க வேண்டிய பல காட்சிகள் இன்னும் எடுக்கப்படாமல் மீதம் இருந்தன. ஆனால் ஏ.எல்.எஸ்.  அதிர்ச்சி அடைந்தது அதற்காக அல்ல. கலைவாணர் என்ற நல்ல நண்பர் மறைந்துவிட்டாரே என்ற கவலைதான் அவரை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

மறைந்த கலைவாணருக்கு ஒரு சிலை அமைத்து அந்தச் சிலையை ஊர் மக்கள் வணங்குவது போல ஒரு காட்சியை அமைத்து ‘அம்பிகாபதி’ படத்திலே அந்தக் கதாப்பாத்திரத்திற்கு ஒரு முடிவைத்  தந்த ஏ.எல்.எஸ்., ‘அம்பிகாபதி’ படத்தை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு காணிக்கையாக்கியிருந்தார்.

அதற்குப் பிறகு ஏ.எல்.சீனிவாசன் செய்த ஒரு செயல் அவர் எவ்வளவு சிறந்த மனிதாபிமானி என்பதை கலை உலகிற்கு உணர்த்தியது.

‘பணம்’ திரைப்படத்தை ஏ.எல்.சீனிவாசனுடன் இணைந்து தயாரித்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஏறக்குறைய மூன்று லட்சம் ரூபாயை  ஏ.எல்.சீனிவாசனுக்குக்குத் தர வேண்டி இருந்தது.

கலைவாணரின்   மறைவுக்குப் பிறகு ஏ.எல்.சீனிவாசனுக்கு அவர் தர வேண்டிய அந்தப் பணத்தை தள்ளுபடி செய்து உதவும்படி தென்னிந்திய நடிகர் நடிகர் சங்கம்  ஏ.எல்.சீனிவாசனுக்கு  1957-ம் ஆண்டு செப்டம்பர்  மாதம் 27-ம் தேதி  கடிதம் ஒன்றை அனுப்பியது.  

அந்தக்  கடிதம் கிடைத்த அடுத்த நாளே தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கீழ்க்கண்ட  கடிதத்தை  எழுதினார் ஏ.எல்.சீனிவாசன்.

அன்புடையீர்,

வணக்கம்.

27-ம் தேதியிட்ட தங்கள் அன்புமிக்க கடிதம் கிடைக்கப் பெற்றோம் என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

காலஞ்சென்ற திரு என் எஸ்.கிருஷ்ணன் அவர்களிடமிருந்து எங்களுக்கு வர வேண்டிய தொகை ரூபாய் 3,70,337-5_2 (மூன்று லட்சத்து எழுபதாயிரத்து முன்னூற்று முப்பத்தேழு ரூபாய்  ஐந்தனா இரண்டு பைசா)வையும் தள்ளுபடி செய்து கணக்கை நேர் செய்துவிட்டோம் என்பதை இதன் மூலம் அறிவிக்கிறோம். 

தங்கள் உண்மையுள்ள

ஏ.எல்.சீனிவாசன்

மதராஸ் பிக்சர்ஸ் உரிமையாளர்.

என்று அந்தக் கடிதத்திலே எழுதியிருந்தார் ஏ.எல்.எஸ்.  

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக அப்போது வெளிவந்து கொண்டிருந்த ‘நடிகன் குரல்’ இதழ் கலைவாணர் இறந்த பிறகு அவருக்கு நினைவு மலர்  ஒன்றை வெளியிட்டபோது அந்த இதழிலே ஏ.எல்.எஸ்., நடிகர் சங்கத்துக்கு எழுதிய கடிதத்தை அப்படியே பிரசுரித்தது. அது  மட்டுமின்றி,

“கலைவாணர் திரு என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள்பால் தமிழகம் செலுத்தும் அளவில்லாத மதிப்புக்கும் அன்புக்கும் எடுத்துக்காட்டாக மதராஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் திரு ஏ.எல்.எஸ்., அவர்கள் ஒப்புயர்வற்றதோர் அரும்பெரும் தியாகப் பணி ஆற்றியிருக்கிறார்.

திரு என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களிடமிருந்து தனக்கு சேர வேண்டியிருந்த ஒரு பெருந் தொகையை, ஏறக்குறைய மூணே  முக்கால் லட்சம் ரூபாய்களைத் தியாகம் செய்திருக்கிறார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று கருணையுடன் இந்த மகத்தான தியாகம் புரிய முன் வந்த திரு.ஏ.எல்.எஸ்., அவர்களுக்கு சங்கம் தனது இதயம் கனிந்த பெரு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது..”

என்று ஏ.எல்.எஸ்., அவர்களுக்கு  நன்றி தெரிவித்து ஒரு செய்தியையும், அந்த இதழிலே வெளியிட்டிருந்தது நடிகர் சங்கம்.

அன்று ஏ.எல்.எஸ்., அவர்கள் தள்ளுபடி செய்த தொகையின் இன்றைய மதிப்பு ஏறக்குறைய பதினோரு கோடி ரூபாயைத் தாண்டும்.

மூணே  முக்கால் லட்சம் ரூபாய்களைத் தள்ளுபடி செய்தபோது ஏ. எல். எஸ் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய லட்சாதிபதி இல்லை. ஆனால் மற்றவர்களுக்கு உதவுகின்ற மனதைப் பொருத்தவரையில் அவர் கோடீஸ்வரராக இருந்தார். அதனால்தான் ஒரு நொடிகூட யோசிக்காமல் நடிகர் சங்கத்திலிருந்து கடிதம் வந்த மறுநாளே  அந்தத்  தொகையை ரத்து செய்து கடிதம் அனுப்ப அவரால் முடிந்தது.

இது போன்ற பெருந்தன்மையான அவரது நடவடிக்கைகள்தான் தயாரிப்பாளர் என்ற நிலையிலிருந்து தயாரிப்பாளர்களின் தலைவர் என்ற நிலைக்கு அவரை உயர்த்தியது. இல்லையென்றால் பட உலகில் தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்த எட்டு ஆண்டுகளில் அவரால் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு தலைவராக ஆகியிருக்க முடியுமா…?

- Advertisement -

Read more

Local News