Touring Talkies
100% Cinema

Friday, August 29, 2025

Touring Talkies

‘கடுக்கா’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஈரோடு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் விஜய் கவுரிஷும், ஆதித்யாவும் நெருங்கிய நண்பர்கள். அந்தக் கிராமத்திற்கு புதிதாக வரும் கல்லூரி மாணவி ஸ்மேகாவை இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் காதலிக்கிறார்கள். ஆனால், அந்த ஹீரோயின் ஒரே நேரத்தில் இருவரையும் காதலிக்கிறாள். இந்த உண்மை நண்பர்களுக்குத் தெரிந்ததும் சண்டை வெடிக்கிறது. ஒரே நேரத்தில் இரு பேரை ஹீரோயின் ஏன் காதலிக்கிறாள்? கடைசியில் யாருக்கு தான் அவள் “அல்வா” கொடுக்கிறாள்? என்பதுதான் ‘கடுக்கா’ திரைப்படத்தின் கதை. கொங்கு பகுதிகளில் “கடுக்கா கொடுத்தது” என்றால் ஏமாற்றிவிட்டார் என்று அர்த்தமாம். அதனால்தான் இப்படத்திற்கு அந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. புதுமுக இயக்குநர் எஸ். எஸ். முருகராசு இப்படத்தை இயக்கியுள்ளார்.

தினமும் டிப்-டாப்பாக பஸ் ஸ்டாண்டுக்கு செல்வது, பக்கத்தில் வரும் பெண்ணை நோட்டமிடுவது, சில சமயம் அடியையும் வாங்குவது என்று ஜாலியாக வாழும் இளைஞனாக ஹீரோ விஜய் கவுரிஷ் நடித்துள்ளார். எதிர் வீட்டுக்கு ஹீரோயின் குடிபெயர்ந்ததும் அவளை சுற்றி, லவ் லெட்டர் கொடுக்கிறார். அதற்கு ஹீரோயின் ஓகே சொல்ல, அவர் சந்தோஷத்தில் திளைக்கிறார். கதை 2006ஆம் ஆண்டைச் சுற்றி நகர்கிறது. லுங்கி கட்டி பந்தாவாக அலைவது, கயிறு கட்டிலில் சாய்ந்து உறங்குவது, ரேடியோவில் பாடல் கேட்பது, காதலிப்பதையே வேலை போலக் கொண்டு இருப்பது போன்ற கிராமத்து இளைஞனின் அன்றாட இயல்புகளை அவர் அழகாகச் செய்துள்ளார். காதலை வெளிப்படுத்தும் காட்சிகளும், நண்பன் காதலிக்கிறான் என்று தெரிந்து பதறும் தருணங்களும், கடைசியில் நண்பனுடன் மோதும் காட்சிகளும் சிறப்பாக அமைந்துள்ளன. எந்த ஹீரோயிசமும் இல்லாமல் அவர் பேசும் விதமும் நடக்கும் முறையும் நம் பக்கத்து வீட்டு பையனைப் போல் உணர வைக்கின்றன.

இன்னொரு நண்பனாக வரும் ஆதர்ஷ் தனது பங்கினை சிறப்பாகச் செய்துள்ளார். வருங்கால மாமனாருடன் சேர்ந்து மதுவை அருந்துவது, நண்பன் காதலில் இருப்பதை அறிந்தவுடன் அவனைத் துரத்தி அடிப்பது போன்ற காட்சிகளில் அவரது நடிப்பு இயல்பாகத் தெரிகிறது. கல்லூரி மாணவியாக வரும் ஸ்மேகா, ஹீரோயினாக பந்தா காட்டாமல், பில்டப் இல்லாமல், கொங்கு கிராமத்து பெண்ணின் இயல்பைச் சிறப்பாகச் சித்தரித்துள்ளார். அவரது சிறிய சிறிய டயலாக்குகளும் அசைவுகளும் மனதில் நிற்கின்றன. ஒரே நேரத்தில் இருவரையும் காதலிக்க முயலும் அவரின் பிளான், கிளைமாக்ஸில் போலீஸ் ஸ்டேஷனில் பேசும் வசனங்கள் ஆகியவை சூப்பராகப் பட்டுள்ளன.

ஹீரோயினின் அப்பாவாக பட்டிமன்றம் கொங்கு மஞ்சுநாதன் நடித்துள்ளார். அவரின் கொங்கு உச்சரிப்பும், வெள்ளந்தியான நடிப்பும் சிறப்பாக இருக்கிறது. இனி அவரை பல படங்களில் காண முடியும். அவரின் மனைவியாக வரும் நடிகை, ஹீரோ அம்மாவாக மணிமேகலை, டீக்கடை தாத்தா, திருப்பூர் நண்பன் உள்ளிட்ட பல கதாபாத்திரங்கள் மனதில் பதிகின்றன. இவை அனைத்தும் நம்மால் கிராமங்களில் பார்த்து பழகியவர்களைப் போலவே தோன்றுவதை இயக்குநரின் திறமை எனக் கூறலாம்.

இரண்டு நண்பர்கள் ஒரே பெண்ணை காதலிக்கும் கதை என்றாலும், இதுபோன்ற கதைக்களத்தில் பல படங்கள் வந்திருந்தாலும், கொங்கு கிராமப்புற பின்னணியில் இந்தக் காதல் கதையை நகைச்சுவையுடன் இயல்பாக நகர்த்திய விதம் புதுமையாகத் தெரிகிறது. ஈரோடு கிராமப்புற பேச்சு வழக்குத் தன்மையும், சினிமாத்தனமற்ற நடிகர்களின் இயல்பான நடிப்பும் படத்தை தாங்கிச் செல்கின்றன. “அட, இது புதுசாக இருக்குதே” என்கிற உணர்வைத் தரும் வகையில் படம் அமைந்துள்ளது. தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட கொங்கு பின்னணியிலான கிராமக் காதல் கதை வருவது பல ஆண்டுகளுக்குப் பிறகே என்கிற பீலிங்கை ஏற்படுத்துகிறது.

- Advertisement -

Read more

Local News