Touring Talkies
100% Cinema

Monday, August 25, 2025

Touring Talkies

‘இந்திரா’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனது மனைவியை கொடூரமாகக் கொன்ற வில்லனை கண்டுபிடிக்கும் ஹீரோவின் கதை. “இதிலென்ன புதுமை?” என நீங்கள் கேட்பீர்களா? ஆனால், இந்தக் கதையில் புதுமை இருக்கிறது. ஹீரோ வசந்த் ரவி முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர். அதிகமாக மது அருந்தியதனால் கண் பார்வையை இழந்தவர். தனது வீட்டுக்குள், அவர் இன்னொரு அறையில் இருந்தபோதே உள்ளே புகுந்து மனைவியை கொலை செய்கிறான் வில்லன். பார்வையற்ற ஹீரோ இப்படியொரு சூழலில் அந்தக் கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் முக்கிய அம்சமாகிறது. இதற்கிடையில் வரிசையாக பலரை கொன்று அவர்களின் இடது கையை மட்டும் வெட்டி எடுக்கும் வில்லன் சுனிலுக்கும், இந்தக் கொலைக்கும் என்ன தொடர்பு? அந்தக் கொலைகளுக்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? இறுதியில் ஹீரோ கொலையாளியை எவ்வாறு பிடிக்கிறார்? யார் அந்தக் கொலையாளி? — இந்த கேள்விகளுக்கெல்லாம் சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் விடை தரும் திரைப்படம் இந்திரா. புதுமுக இயக்குனர் சபரீஷ் நந்தா இப்படத்தை இயக்கியுள்ளார்.

முதல்பாதியில் வழக்கமான சீரியல் கில்லர் கொலைகள், சுனிலின் சைக்கோ வேடம், ஹீரோவின் விசாரணை ஆகியவை புது அம்சம் இல்லாமல் பழக்கமான பாணியிலேயே நகர்கிறது. ஆனால், இடைவேளைக்குப் பிறகு கதை முற்றிலும் வேறு தளத்தில் பயணிக்கிறது. புதுப்புது கதாபாத்திரங்கள் அறிமுகமாகின்றன, சில நிகழ்வுகள் கதை சொல்லும் வேகத்தை அதிகரிக்கின்றன. உண்மையைச் சொன்னால், முதல்பாதியை விட பிற்பாதிதான் உண்மையான கதை. வேலை இழந்ததால் உண்டான மன அழுத்தம், மனைவியை இழந்த துயரம், கண் பார்வையற்ற வாழ்வின் வேதனை, கடைசியில் பல உண்மைகளை உணர்ந்து மிரள்வது என வசந்த் ரவி தனது நடிப்பில் சிறப்பாகச் சித்தரிக்கிறார். சில இடங்களில் ஓவர் ரியாக்ஷனை தவிர்த்திருக்கலாம் என்றாலும், அவர் நடிப்புக்கு பாஸ்மார்க் கிடைத்துள்ளது. ஹீரோயின் சில காட்சிகளில் மட்டுமே தோன்றி மறைந்துவிடுகிறார். ஆனால், பிற்பாதியில் வரும் அனிகா தனது நடிப்பால் தனித்துவத்தை வெளிப்படுத்துகிறார்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் கல்யாண் படம் முழுக்க “நான் கறாரான ஆள்” என தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார். இடைவேளைக்குப் பின் அனிகா சம்பந்தப்பட்ட காதல் கதை, அவரது காதலனாக வரும் சுமேஷ் மூரின் நடிப்பு, அவரது கோபம் ஆகியவை படத்தை புதிய தளத்துக்குக் கொண்டு செல்கின்றன. ஆனால், கதையின் முக்கியக் கருவாக இருப்பதால் முழுமையாக வெளிப்படையாகச் சொல்ல முடியாது. சுமேஷ் மூரின் சில செயல்பாடுகள் சினிமாவுக்கே உரிய பாணியில் அமைந்திருப்பதால் “இப்படியெல்லாம் ஒரு வீட்டுக்குள் நடக்குமா?” என சிரிக்க வைக்கிறது. அதேசமயம், “அவ்வளவு பெரிய அபார்ட்மென்ட்டில் சிசிடிவி கேமரா சரியாக இருக்காதா?” என்ற கேள்வியும் எழுகிறது.

அபார்ட்மென்டில் நடக்கும் திரில்லர் காட்சிகளை ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ் நேரடியாக பார்ப்பது போலக் காட்சியமைத்துள்ளார். குறிப்பாக சுனில் சம்பந்தப்பட்ட காட்சிகளில் கேமரா டோனும் சரியாகப் பொருந்துகிறது. அஜ்மல் இசையமைத்த பாடல்கள் சராசரியாக இருந்தாலும், பின்னணி இசை பல இடங்களில் பக்காவாகச் சென்று காட்சிகளை மெருகேற்றுகிறது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் அபார்ட்மென்ட் மற்றும் போலீஸ் விசாரணையிலேயே சிக்கிக் கொண்டதால், சில இடங்களில் சலிப்பை உண்டாக்குகிறது. சுனிலின் கதாபாத்திரம் படத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு தென்படாமல் போகிறது. அவர் செய்துவரும் கொலைகளுக்கான சரியான காரணம் கூறப்படவில்லை. கிளைமாக்ஸில் “ஏதோ பெரிய விஷயம் நடக்கப்போகிறது” என சுவாரஸ்யம் ஏற்படுத்தினாலும், முடிவில் படத்தை பார்ட்–2க்கான முன்னோட்டமாக முடித்துவிடுகிறார் இயக்குனர். சுவாரஸ்யம், அழுத்தம் இல்லாமல் கதை நிறைவடைகிறது. திரில்லர் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு இந்திரா ஓரளவு சுவாரஸ்யமாக இருக்கலாம். ஹீரோவின் பெயர் இந்திரா என்பதால் இப்படத்திற்கும் அந்தத் தலைப்பே சூட்டப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News