‘நாளைய இயக்குநர் சீசன் 1’ மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சூரிய பிரதாப், நடிகர் கவுதம் ராம் கார்த்திக்கை கதாநாயகனாகக் கொண்டு ‘ரூட் – ரன்னிங் அவுட் ஆப் டைம்’ திரைப்படத்தை இயக்குகிறார். முன்னதாக ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படத்தில் அசோசியேட் டைரக்டராக பணியாற்றியவர் இவர். வெரஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம், தனது முக்கிய தயாரிப்பாக, ‘ரூட் – ரன்னிங் அவுட் ஆப் டைம்’ என்ற புதிய கிரைம் திரில்லர் திரைப்படத்தை தயாரிக்கிறது.

‘ரூட்’ திரைப்படம், அறிவியல் புனைகதை மற்றும் கிரைம் திரில்லர் அம்சங்களை உணர்வுப்பூர்வமான கதைக்களத்தில் புதிய முயற்சியாக உருவாகிறது. இதில் கதாநாயகனாக கவுதம் கார்த்திக் நடிக்கிறார். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவரின் இந்த புதிய முயற்சி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை பவ்யா திரிகா, கவுதம் ராம் கார்த்திக்கின் ஜோடியாக நடிக்கிறார். ‘ஸ்ட்ரீ 2’ மூலம் பிரபலமான பவ்யா திரிகா, இத்திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், பாலிவுட் பிரபல நடிகர் அபார்ஷக்தி குரானா, இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் அபார்ஷக்தி குரானா, தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமாகிறார்.
இத்திரைப்படத்தின் பூஜை நிகழ்ச்சி கடந்த ஜூலை மாதம் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிவியல் கற்பனையும் உணர்ச்சி பூர்வமான அம்சங்களும் இணைந்த ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லராக படம் உருவாகி வருகிறது. சமீபத்தில், சூரிய பிரதாப் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், பவ்யா திரிகா உள்ளிட்டோர் நடிக்கும் ‘ரூட்’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.