தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் கார் பந்தய வீரராகவும் விளங்குகிறார். ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பிறகு, அவர் தனது முழு கவனத்தையும் கார் பந்தயங்களில் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டிலிருந்து கார் பந்தயத்தில் தீவிர ஈடுபாடு காட்டி வரும் அஜித், ‘அஜித் குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த கார் ரேஸிங் அணியை உருவாக்கியுள்ளார்.

இந்த கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற பந்தயங்களில் பங்கேற்று வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில், இந்த அஜித் குமார் ரேஸிங் நிறுவனத்தில் ஓட்டுநராக தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பந்தய வீரர் மற்றும் இந்தியாவின் முதலாவது எஃப்1 ஓட்டுநரான நரேன் கார்த்திகேயன் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து அஜித் குமார் ரேஸிங் நிறுவனத்தின் எக்ஸ் பக்கத்தில் வெளியான பதிவில், “நரேன் எங்கள் அணியில் இணைவது ஒரு பெரும் பாக்கியம். அவருடன் இணைந்து பந்தயத்தில் பங்கேற்பது மிகவும் பெருமையானது. நரேனுடன் இணைந்து ‘ஆசியன் லீ மான்ஸ்’ தொடரில் பங்கேற்பது எங்கள் அனைவருக்கும் ஒரு சிறப்பான அனுபவமாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.