இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘கூலி’. இந்த படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், உப்பேந்திரா, சவுபின் சாகிர் மற்றும் சிறப்பு தோற்றத்தில் அமீர்கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா சமீபத்தில் ஹைதராபாதில் நடைபெற்ற கூலி திரைப்படத்தின் தெலுங்கு ப்ரீ ரிலீஸ் விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தின் பட்ஜெட்டில் 5 கோடி ரூபாய் மிச்சம் வைத்து படத்தை திட்டமிட்டபடி முடித்துவிட்டார் என்றார். இன்னும் 5 கோடி முதல் 10 கோடி வரை கூடுதலாக செலவழித்து இருந்தால் கூட சன் பிக்சர்ஸ் நோ சொல்லியிருக்க மாட்டார்கள் என்றாலும், மிகச் சரியான முறையில் திட்டத்திற்கேற்ப படத்தை முடித்துவிட்டார் எனக் கூறினார்.
மேலும், இப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின் போது, ரஜினிகாந்த் சார் இப்படத்தில் பணியாற்றிய சுமார் 350 பேரை அழைத்து, அவர்களது கையில் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கி, இதை உங்கள் குழந்தைகளுக்கும் வீட்டிற்கும் ஏதேனும் வாங்கி செல்லுங்கள் என்று கூறியதாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தார் நடிகர் நாகார்ஜூனா.