‘கட்சி சேரா’ மற்றும் ‘ஆச கூட’ ஆகிய இரண்டு ஆல்பங்களின் மூலம் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமானவராகிய சாய் அபயங்கர், திரைப்படத் துறையில் இசையமைப்பாளராகத் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். அவரை முதலில் தான் தயாரிக்கும் ‘பென்ஸ்’ படத்திற்காக முதன்முதலாக ஒப்பந்தம் செய்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், நிவின் பாலி நடிக்கிறார்கள்.

அதற்குப் பின் ‘டூட்’, ‘கருப்பு’, ‘சிம்பு 49’, ‘அல்லு அர்ஜுன் 22’, ‘பல்டி’ (மலையாளம்) உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், நேற்று பூஜை நடைபெற்ற கார்த்தி நடிக்கும் ‘மார்ஷல்’ படத்திற்கும் அவர் இசையமைப்பாளராக இணைந்துள்ளார்.
இவை தவிர, சிவகார்த்திகேயனின் 24வது படத்திற்கும் அவர்தான் இசையமைக்கவிருக்கிறார் என்ற தகவலும் வெளியானது. இன்னும் சில புதிய படங்களுக்கும் அவர் இசையமைப்பதாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. திரையுலகில் அறிமுகமாகும் முன்பே இத்தனை வாய்ப்புகளை பெற்றுள்ள சாய் அபயங்கர், இவை அனைத்தையும் எப்படி சமாளித்து தரமான பாடல்களை உருவாக்கப்போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.